
புதுடெல்லி: சென்னையில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ரூ.196 கோடியில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நேற்று தெரிவித்தது.
இது குறித்து மஹிந்திரா நிறுவன வாகனப் பிரிவுத் தலைவர் ஆர்.வேலுசாமி கூறியதாவது: “மஹிந்திரா ரிசர்ச் வேலி மையத்தின் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.196 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மேம்பட்ட வாகன வடிவமைப்பு, தயாரிப்புப் பொறியியல் மற்றும் எதிர்காலத் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளைத் துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இந்த முதலீடு செய்யப்பட உள்ளது. நிறுவனத்தின் பொறியியல் மற்றும் சோதனைத் திறனை வலுப்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான ஒரு முக்கிய மையமாக சென்னை திகழ்வதை இந்த முதலீடு உறுதிப்படுத்தும்.
இந்த விரிவாக்க திட்டப் பணிகள் நடப்பு ஆண்டுக்குள்ளாகவே நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு வரும். மேம்பட்ட ஆராய்ச்சி மையம் மற்றும் புதிய சோதனை உட்கட்டமைப்புகள், பல்வேறு வாகனப் பிரிவுகளில் அடுத்த தலைமுறைக்கான தளங்களை உருவாக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” – குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்
இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு… ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்
“இது ஒரு தொடக்கம்” – பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து