பெங்களூரு: கர்நாடக மாநிலம் குடகில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த மார்த்தாண்டா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கர்நாடக மாநிலம் குடகில் உள்ள துபாரே யானைகள் முகாமில் நேற்று முன்தினம் மார்த்தாண்டா, கஞ்சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில் இரு யானைகளும் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டதில் காயமடைந்தன.
இந்த யானைகளுக்கு இடையே சிக்கிய சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி (33) காயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது அருகிலிருந்த அவரது கணவர் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு, மனைவியை மீட்க போராடிய காட்சி, இணையத்தில் வைரலானது.
மடிக்கேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஜாய்சியின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக உயிரிழந்த ஜாய்சியின் கண்களை தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த ஜாய்சியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என கர்நாடக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாரே யானைகள் முகாமில் கஞ்சன் யானை தாக்கியதில் மார்த்தாண்டா யானைக்கு உள் மற்றும் வெளிக் காயம் ஏற்பட்டது. மார்த்தாண்டா யானை பாறைகளுக்கு நடுவில் விழுந்ததில் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்து அதனை மீட்ட வனத்துறை அதிகாரிகள் மார்த்தாண்டா யானையை மடிக்கேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மார்த்தாண்டா யானை உயிரிழந்தது.
53 வயதான மார்த்தாண்டா யானை 4500 கிலோ எடை கொண்டது. 2014-ம் ஆண்டு ஹாசன் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட இந்த யானை, நன்கு பயிற்றுவிக்கப்பட்டு மைசூரு தசரா ஊர்வலத்துக்கு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Stories
“மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜக அரசு அகற்றப்படும்” – மம்தா பானர்ஜி
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் செப்டம்பரில் டெல்லி வருகை
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு.. ஒரே வாரத்தில் 2 வது முறை.. இன்று விலை விவரம்