August 8, 2026

செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா

செயின்ட் லூயிஸ்: அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் நகரில் செயின்ட் லூயிஸ் ரே​பிட் மற்​றும் பிளிட்​ஸ் செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

கிராண்ட் செஸ் டூர் அட்​ட​வணை​யின் அங்​க​மாக நடை​பெறும் செயின்ட் லூயிஸ் செஸ் போட்​டி​யில், ரேப்​பிட் பிரி​வின் முடி​வில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர். பிரக்​ஞானந்தா 12 புள்​ளி​கள் பெற்று முன்​னிலை​யில் இருந்​தார்.

இதைத் தொடர்ந்து நடை​பெற்ற பிளிட்​ஸ் பிரி​வில் பிரக்​ஞானந்தா 11.5 புள்​ளி​களை குவித்து மொத்​தம் 23.5 புள்​ளி​களு​டன் சாம்​பியன் பட்​டம் வென்​றார். செயின்ட் லூயிஸ் தொடரில் தமிழகத்தை சேர்ந்த 20 வயதான பிரக்​ஞானந்தா சாம்​பியன் பட்​டம் கைப்​பற்​று​வது இதுவே முதன்​முறை​யாகும். 18 ஆட்​டங்​கள் கொண்ட பிளிட்​ஸ் பிரி​வில் பிரக்​ஞானந்தா ஒரு ஆட்​டத்​தில் மட்​டுமே தோல்வி அடைந்​திருந்​தார்.

உஸ்​பெகிஸ்​தானின் ஜவோகிர் சிந்​தரோவ் 22 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தை​யும், அமெரிக்​கா​வின் வெஸ்லி சோ 20 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தை​யும் பிடித்​தனர். தற்​போதைய வெற்​றி​யால் பிரக்​ஞானந்தா கிராண்ட் செஸ் டூர் பட்​டியலில் 2-வது இடத்​துக்கு முன்​னேறி உள்​ளார்.

இது இந்த ஆண்​டின் இறு​தி​யில் நடை​பெறவுள்ள கிராண்ட் ஃபைனல் போட்​டிக்கு அவர், தகுதி பெறு​வதை கிட்​டத்​தட்ட உறுதி செய்​துள்​ளது. எனினும் நாளை (9-ம் தேதி) நடை​பெறும் கிளாசிக்கல் போட்டியில் பிரக்ஞானந்தா எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே அனைத்தும் அமையக்கூடும்.

தமிழக முதல்வர் பாராட்டு

செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர். பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், தனது எக்ஸ் வலைதள பதிவில், “அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், பிரக்ஞானந்தா தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடி சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையான ஆதரவையும், வழிகாட்டுதலையும் எஸ்டிஏடி வழங்கி வருகிறது. எலைட் திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் பிரக்ஞானந்தாவுக்கு எனது பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love