ஸ்டான்லி மாணவர்கள் 10 தங்க பதக்கங்கள் பெற்று சாதனை

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை ஏற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் லக்னோ சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவன இயக்குநர் மருத்துவர் ரா.கி.திமான், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கி.நாராயணசாமி, பதிவாளர் மருத்துவர் கே.சிவசங்கீதா.
சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று நடந்தது.
தமிழக ஆளுநரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த விழாவில், மருத்துவத்தில், 12,016 பேரும், பல் மருத்துவத்தில் 2,569 பேரும், இந்திய முறை மருத்துவத்தில் 3,269 பேரும், மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளில் 32,305 பேரும் என மொத்தம் 50,159 பேர் பட்டங்களைப் பெற்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த சுவேதா என்ற மாணவி 9 பதக்கங்களைப் பெற்றார். அதேபோல், முதுநிலை பட்டம் பெற்ற சுருதி, நிரஞ்சனா, ஆஷா ஆகியோர் தலா 6 பதக்கங்களைப் பெற்றனர். விழாவில் பல்கலை.
துணைவேந்தர் பேராசிரியர் கி.நாராயணசாமி, உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மருத்துவர் ரா.கி.திமான், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், ஆளுமைக்குழு உறுப்பினர்கள், ஆட்சி மன்றம் மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்தநாள அறுவை சிகிச்சை துறையில் உயர் சிறப்பு பட்டமேற்படிப்பான எம்சிஎச் படித்து முடித்த மருத்துவர் விக்ரமன் (2024-25), மருத்துவர் கண்மணி (2025-26) ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர்.
அதேபோல், நரம்பியல் 2, மனநல மருத்துவம் 2, தடயவியல் மருத்துவம் 1, ரேடியாலஜி 1, பயோ கெமிஸ்ட்ரி 1, மைக்ரோ பயாலஜி 1 என மொத்தம் 10 தங்கப்பதக்கங் களை பெற்று ஸ்டான்லி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. தங்க பதக்கங்களை பெற்ற மாணவர்களை கல்லூரி டீன் அரவிந்த் பாராட்டினார்.
விழாவில், பல்கலை. துணைவேந்தர் பேராசிரியர் கி.நாராயணசாமி பேசியதாவது: இந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாகச் செயலாற்றும் மாணவருக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 75 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் 5-க்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது. மருத்துவ அறிவியலுடன், தொழில்நுட்ப கற்றலை ஊக்குவிக்கும் வகையில், அண்ணா பல்கலை., சென்னை ஐஐடி, வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த மருத்துவ படிப்புகளும் ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சரும், பல்கலை.இணைவேந்தருமான மா.சுப்பிரமணியன், காய்ச்சல் காரணமாக, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விழாவில் அவர் பங்கேற்க முடியாத நிலையில், துறையின் செயலர் செந்தில்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட் டும், அவரும் பங்கேற்கவில்லை.

More Stories
தமிழகத்தில் வெளிநாட்டு பல்கலை. தொடங்க அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கடும் எதிர்ப்பு
பிஎட், எம்எட் மாணவர் சேர்க்கைக்கு விவரம் சமர்ப்பிக்க அவகாசம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கவிதா தகவல்