November 27, 2026

டிவிஎஸ் குடும்பச் சொத்தில் சம பங்கு கோரி லட்சுமி வேணு வழக்கு!

டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி வேணு, குடும்பச் சொத்தில் தனக்குச் சம பங்கு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நவம்பர் 27ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கொள்ளுத்தாத்தா மற்றும் தாத்தாவின் பாரம்பரியச் சொத்துகளில், சகோதரர் சுதர்ஷன் வேணுவுக்கு உள்ள உரிமையைப் போலவே தனக்கும் உரிமை உண்டு என லட்சுமி வேணு மனுவில் கூறியுள்ளார். கூட்டுக் குடும்பச் சொத்துகளைப் பிரித்து, தனக்குரிய பங்கை ஒதுக்கவும், பலமுறை கேட்டும் வழங்கப்படாத ஆவணங்கள் மற்றும் தகவல்களைப் பெறவும் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார். சமரசப் பேச்சுவார்த்தை முயற்சிகள் முடிவடைந்ததால் வழக்கு தொடர்ந்ததாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேணு சீனிவாசனுக்கு சுதர்ஷன் வேணு, லட்சுமி வேணு என ஒரு மகனும் மகளும் உள்ளனர். டிவிஎஸ் மோட்டார் கம்பெனியை சுதர்ஷன் வேணு வழிநடத்தி வருகிறார்; சுந்தரம்-கிளேட்டன் நிறுவனத்தின் பொறுப்பு லட்சுமி வேணுவிடம் உள்ளது. 2025 ஏப்ரலில் சுதர்ஷன் வேணுவை டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முக்கியப் பலனளிக்கும் உரிமையாளராகச் சேர்க்க எடுத்த முடிவையும் லட்சுமி வேணு கேள்வி எழுப்பியுள்ளார்.

டிவிஎஸ் ஹோல்டிங்ஸ், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ், சுந்தரம்-கிளேட்டன் உள்ளிட்ட நிறுவனங்களில் தந்தைக்குள்ள பங்குகளைத் தனக்கும் சகோதரருக்கும் சமமாகப் பிரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மகனுக்கு அதிக உரிமை என்ற நிலைப்பாடு சட்டப்படி தவறு எனவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். தாயார் மல்லிகா சீனிவாசன், லட்சுமி வேணுவுக்கு நியாயமான பங்கு வழங்க ஆதரவு தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. வழக்கில் நீதிமன்றம் எடுக்கும் முடிவு நவம்பர் 27ஆம் தேதி தெரியவரும்.

Spread the love