நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழாவையொட்டி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

நத்தம் மாரியம்மன் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழாவையொட்டி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் சென்று அங்கு புனித நீராடி, தீர்த்தக் குடங்களுடன் நத்தத்தில் உள்ள சந்தனக் கருப்பு சுவாமி கோயிலில் வந்து ஒன்று கூடினர்.
மஞ்சள் உடையணிந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்களை காலை 8.45 மணிக்கு மாரியம்மன் கோயிலுக்கு மேளதாளம் முழங்க, வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

அப்போது பக்தர்கள் தீர்த்தக் குடங்களை தலையில் சுமந்து வர கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சென்றனர். பின்னர் அங்கு அம்மன் உருவம் பொறித்த மஞ்சள் காப்பு கட்டி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 15 நாள் விரதம் தொடங்கினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
இன்றிரவு அம்மன் குளத்திலிருந்து கம்பம் எடுத்து வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படும்.விழா நாட்களின் இரவில் பிப்ரவரி 27 ஆம் தேதி மயில் வாகனத்திலும், மார்ச் 3 ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 6 ஆம் தேதி அன்ன வாகனத்திலும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் நகர்வலம் வரும். அப்போது பக்தர்கள் ஆங்காங்கே திரண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபடுவர்.
மார்ச் 8 ஆம் தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்தல், 9 ஆம் தேதி அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை சாட்டுதல் நிகழ்ச்சிகளும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 10 ஆம் தேதி அதிகாலை பக்தர்கள் அக்கினிச் சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், காந்திநகர் பொதுமக்களால் கழுகு மரம் ஊன்றும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

பிற்பகலில் காமராஜ் நகர் பொதுமக்களால் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியை தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருக்கும் பூக்குழியில் பக்தர்கள் இறங்குவர். தொடர்ந்து அன்றிரவு கம்பம் கோயிலிலிருந்து எடுத்துச் சென்று அம்மன் குளத்தில் விடப்படும். மறுநாள் 11 ஆம் தேதி காலையில் அம்பாள் மஞ்சள் நீராடுதலைத் தொடர்ந்து மாரியம்மன் அன்றிரவு சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு இரவு முழுவதும் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்து கோயிலைச் சென்றடைவதுடன் திருவிழா நிறைவு பெறும்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பாலசரவணன், திருக்கோயில் பரம்பரை பூசாரிகள் கணேஷ், கோபாலகிருஷ்ணன், சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், யுவராஜ், தினேஷ்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர் .
சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளை பேரூராட்சித் தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா வழிகாட்டுதல்படி செயல் அலுவலர் விஜயநாத் தலைமையில் தூய்மைப் பணி ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

More Stories
மாசி மகத்தையொட்டி கும்பகோணம் 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம்: மார்ச் 2-ல் 3 கோயில்களில் தேரோட்டம்
திருமலையில் கோடைக்கால தரிசன ஏற்பாடுகள்