February 23, 2026

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு 40 பைசா விலை குறைந்ததால் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினமும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தினசரி பண்ணைகளில், முட்டை கொள்முதல் விலையை என்இசிசி அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த மாதம் 1ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 5.25 ஆக இருந்தது பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த 17ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 20ம் தேதி முட்டை விலை 20 பைசா குறைந்து ரூ. 5.20 ஆனது.

இந்த நிலையில் இன்று மாலை என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 20 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு 40 பைசா விலை குறைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது ரம்ஜான் மாதம் துவங்கியுள்ளதால் முஸ்லீம்கள் முட்டை சாப்பிடுவது குறைந்துள்ளது. அதே போல் கடந்த புதன்கிழமை முதல் கிறிஸ்துவர்கள் சாம்பல் புதன் விரதம் கடைபிடிக்க துவங்கியுள்ளதாலும் முட்டை நுகர்வு குறைந்துள்ளதால், முட்டை விலை சரிவடைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாக்களில்) : சென்னை 580, பர்வாலா 475, பெங்களூர் 570, டெல்லி 510, ஹொஸ்பேட் 530, ஹைதராபாத் 495, கொல்கத்தா 550, மும்பை 555, மைசூர் 570, விஜயவாடா 530.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 116 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 62 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.

image.png
Spread the love