சென்னை: நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் கண்டித்தும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில், சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தால் லட்சக் கணக்கான மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்த ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்யா பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில், நூற்றுக்கணக்கான இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ‘வந்தே பாரத்’ ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தியும் கைகளில் பதாகைகளை ஏந்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தின் காரணமாக, நெல்லை வந்தே பாரத் ரயில் எழும்பூர் நிலையத்தில் இருந்து சுமார் 10 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து, சூர்யா பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளும் முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன.
வினாத்தாள்கள் கசிந்ததன் காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில், போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் 80-க்கும் மேற்பட்ட முறை கசிந்துள்ளன.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் நமது மாணவ, மாணவிகளைத் தேர்வு மைய வாசலில் வைத்துப் பாதுகாப்பு என்ற பெயரில் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்குகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் சிறிய கம்மல், கொலுசு உள்ளிட்ட நகைகளைக் கூடகழற்றச் சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள்.
ஆனால், வட மாநிலங்களிலோ வினாத்தாள்கள் மிகச் சாதாரணமாகத் தொடர்ந்து கசிந்து வருகின்றன. எனவே, தேர்வு முறைகேடுகளுக்குக் காரணமான தேசிய தேர்வு முகமையை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
இந்த வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உடனடியாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

More Stories
ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது
புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகர் நாளை பதவியேற்பு: தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்கிறார் ரங்கசாமி
விஜய்க்கு கை கொடுத்த காங்கிரஸ்… உடையும் இண்டியா கூட்டணி?