May 18, 2026

பிளே ஆஃப் சுற்று வாய்ப்​பை தக்க வைக்​கும் முனைப்பில் சிஎஸ்கே – இன்று சன்ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் உடன் மோதல்

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் சென்னை சூப்​பர் கிங்​ஸ் (சிஎஸ்கே), சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​கள் மோதவுள்​ளன. சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்​டம் நடைபெறவுள்​ளது. சிஎஸ்கே அணி இது​வரை 12 போட்​டிகளில் விளை​யாடி தலா 6 வெற்​றி, 6 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது.

அடுத்த 2 போட்​டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்​றால் மட்​டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்​பில் நீடிக்க முடி​யும். எனவே, அடுத்த 2 போட்​டிகளுமே சிஎஸ்கே அணிக்கு வாழ்வா சாவா போட்​டிகளாக அமைந்​துள்​ளன. எனவே, இந்த லீக் போட்​டி​யில் வெற்றி பெறு​வதற்கு சிஎஸ்கே அணி வீரர்​கள் பெரு முயற்சி செய்வர் என்​ப​தில் சந்​தேகமில்​லை.

கடந்த லீக் ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி, லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் தோல்வி கண்​டது. அதற்கு முந்​தைய 3 ஆட்​டங்​களி​லும் சிஎஸ்கே அணி வீரர்​கள் சிறப்​பாக செயல்​பட்டு வெற்றி கண்​டிருந்​தனர். ஆனால் லக்னோ உடனான போட்​டி​யில் சிஎஸ்கே வீரர்​களின் பந்​துவீச்சு சுத்​த​மாக எடு​பட​வில்​லை. மேலும் பேட்​டிங்​கின்​போது முன்​வரிசை வீரர்​கள் யாருமே தங்​களது உயர்மட்​டத் திறனை வெளிப்​படுத்​த​வில்​லை.

சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட், உர்​வில் பட்​டேல் ஆகியோர் குறைந்த ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். எனவே, இன்​றைய போட்டியில் இவர்​கள் மட்​டையை சுழற்​றும்​போது அது அணிக்கு வெற்​றி​வாய்ப்​பைத் தேடித் தரும். அது​போலவே கார்த்​திக் சர்​மா, டெவால்ட் பிரே​விஸ், ஷிவம் துபே, பிர​சாந்த் வீர் ஆகியோர் எதிரணி வீரர்​களுக்கு அழுத்​தம் கொடுப்​பர் என எதிர்பார்க்கலாம்.

அதே​போல் பந்​து​வீச்​சில் முகேஷ் சவுத்​ரி, ஸ்பென்​ஸர் ஜான்​சன், அன்​ஷுல் காம்​போஜ், நூர் அகமது, குர்​ஜப்​நீத் சிங் ஆகியோர் ஹைத​ரா​பாத் அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்கக்​கூடும். இன்​றைய போட்​டி​யில் அகீல் ஹொசைன் களமிறங்க வாய்ப்​பு​கள் அதி​கம் உள்​ளன. பந்​து​வீச்​சு, பேட்​டிங், ஃபீல்​டிங் என அனைத்து துறை​களி​லும் சிறப்​பாக செயல்​பட்​டால் மட்​டுமே சிஎஸ்கே அணிக்கு வெற்றி கிட்​டும்.

அதே​நேரத்​தில் ஹைத​ரா​பாத் அணி 12 போட்​டிகளில் விளை​யாடி 7 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 14 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் 3-ம் இடத்​தில் உள்​ளது. அடுத்த 2 போட்​டிகளில் அந்த அணி வெற்றி பெற்​றால் தனது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பலப்படுத்திக் கொள்​ளும். எனவே, சிஎஸ்​கே, பெங்​களூரு ஆகிய 2 அணி​களு​ட​னான கடைசி 2 லீக் போட்​டிகளும் ஹைத​ரா​பாத் அணிக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தவை. எனவே, இன்​றைய போட்டி​யில் ஹைத​ரா​பாத் அணி வீரர்​கள் தங்​களது பலத்தை நிரூபிக்​கக் காத்திருக்கின்​றனர்.

ஹைத​ரா​பாத் அணி, குஜ​ராத் உடனான தனது கடைசி லீக் ஆட்டத்தில் 86 ரன்​களுக்​குச் சுருண்டு மோச​மான தோல்​வியைப் பதிவு செய்​திருந்​தது. எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் தனது பேட்டிங் பலத்தை வெளிப்​படுத்தி தோல்​வியி​லிருந்து மீண்டு வர ஹைத​ரா​பாத் அணி காத்​திருக்​கிறது. டிரா​விஸ் ஹெட், அபிஷேக் சர்​மா, இஷான் கிஷன், ஹென்​ரிச் கிளாசென், சலில் அரோ​ரா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மீண்​டும் ஒரு முறை தங்​களது உயர்​மட்ட செயல்​திறனை வெளிப்​படுத்​து​வார்​கள் என எதிர்பார்க்கலாம்.

அதே​போல் பந்​து​வீச்​சில் பாட் கம்​மின்​ஸ், நிதிஷ்கு​மார் ரெட்​டி, பிரஃபுல் ஹிங்​கே, இஷான் மலிங்​கா, சகிப் ஹுசைன், ஷிவங் குமார் ஆகியோர் சிஎஸ்கே வீரர்​களை நெருக்​கடிக்கு உள்​ளாக்க காத்​திருக்​கின்​றனர். மொத்​தத்​தில் இந்த லீக் ஆட்​டம் இரு அணிகளுக்​குமே வாழ்வா சாவா போட்​டியைப் போன்​ற​தாக அமைந்​துள்​ள​தால்​ சுவாரஸ்​யத்​துக்​கு பஞ்​சமிருக்​காது என்​று நம்பலாம்​.

Spread the love