September 21, 2026

“முதல்வரின் லண்டன் பயணத்தை கிண்டல் செய்வதா?” – அண்ணாமலைக்கு மரிய வில்சன் பதில்

சென்னை: “முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் சென்றது குறித்து அண்ணாமலை கிண்டலாக பேசியுள்ளது சரியல்ல. இதனை கிண்டல், கேலி செய்வது நல்லதல்ல” என தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், “முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் சென்றது குறித்து அண்ணாமலை கிண்டலாகப் பேசியுள்ளார். அண்ணாமலையை முதிர்ச்சியான அரசியல்வாதியாக பார்க்கிறேன். அவர் இப்படிப் பேசுவது சரியல்ல. ஒரு ரூபாய் கூட முதலீடுதான், எனவே எதையும் நாம் உதாசீனப்படுத்த முடியாது. இதனை கிண்டல், கேலி செய்வது நல்லதல்ல.

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி நடப்பதால் ஆகஸ்ட் 2025-ல் ரூ.96,567 கோடியாக இருந்த வரி வருவாய் இந்த ஆண்டு ஆகஸ்டில் ரூ.1,09,104 கோடியாக 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த ஆட்சியில் ஊழல் இல்லாததால் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. முதல் காலாண்டிலேயே இவ்வளவு முன்னேற்றம் இருக்கும்போது, அடுத்த காலாண்டில் வரி வருவாய் இன்னும் உயரும்.

ஒவ்வொரு மாதமும் அரசின் நிதிநிலை குறித்த விவரங்களை தெரிவிப்பேன். காலை உணவுத் திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், பால் கொள்முதல் போன்ற திட்டங்களுக்காக கடன் வாங்கும் தேவை உள்ளது. ஆனால், அதற்கேற்ப நாங்கள் வருவாயையும் பெருக்குவோம்.

கடந்த ஆட்சியில் ஆகஸ்ட் 2025ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஆகஸ்டு 2026ம் ஆண்டில் கடன் 19 சதவீதம் குறைந்துள்ளது. வருவாய் இன்னும் அதிகரிக்கும்போது கடனின் அளவு மேலும் குறையும்” என்றார்.

Spread the love