நாக்பூர்: “விவாதம், உரையாடல், எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் ஆகியவை ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். அதேவேளையில் குடிமக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தினார்.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள கஸ்தூர்சந்த் பூங்காவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய மோகன் பாகவத், “ஜனநாயக அமைப்பில் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் அவற்றை வெளிப்படுத்தும் வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருப்பது இயல்பானது. இதுதான் ஜனநாயகம். எனவே, உரையாடல், விவாதம் மற்றும் ஒருவரின் வாதங்களை முன்வைத்து மற்றவர்களின் வாதங்களுக்குப் பதிலளிக்கும் செயல்முறை ஆகியவை இதில் உள்ளன.
ஜனநாயகத்தில் முரண்பட்ட கண்ணோட்டங்கள் இயல்பாகவே எழும்; சில சமயங்களில் எதிர்ப்பும் அவசியமாகிறது. பொது நலன் சார்ந்த கேள்விகள் எழும்போது, அவை வலுவாக எழுப்பப்பட வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கு நாம் நமது ஆதரவை வழங்க வேண்டும்.
போராட்டங்களும், இயக்கங்களும் ஜனநாயகத்தின் ஒரு பகுதியே. ஆனால் அவ்வாறு செய்யும்போது, நாம் எப்போதும் நமது பொறுப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நாட்டிற்கு அதை வழங்கியபோது, அம்பேத்கர் ஆற்றிய இரண்டு உரைகளிலும் இவையனைத்தும் இடம்பெற்றிருந்தன. அந்தப் பாதையை நாம் பின்பற்றலாம்.
இந்தியாவின் இளைஞர்கள் நாட்டின் “மக்கள்தொகைச் சாதகக் காரணி” ஆவர். அவர்களை ஜனநாயகத்தில் ஈடுபடுத்துவதிலும், வழிநடத்துவதிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாட்டின் இளைஞர்கள் முறையாக வழிநடத்தப்பட்டால் மதிப்புமிக்க தேசியச் சொத்தாக மாற முடியும். ஆனால், அவர்கள் புறக்கணிக்கப்பட்டால் சமூகத்திற்குச் சுமையாக மாறக்கூடும்.
இன்றைய இளைஞர்கள் சுமார் 30 ஆண்டுகளில் முதிய தலைமுறையாக மாறுவார்கள். அப்போது அவர்களும் தங்களுக்குப் பின்வரும் தலைமுறையினரிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்துகொள்ள வேண்டியிருக்கும்” என்று கூறினார்.

More Stories
“இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைத்த முடிவு சரியானது”: உமர் அப்துல்லா
“பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்”: சுதந்திர தின உரையில் கார்கே சாடல்
“தேர்வுகளுக்கு இலவச பயிற்சி, ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி” – பிரதமர் மோடி அறிவிப்பு