புதுடெல்லி: “சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில் பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லையை அகலமாக்குகின்றன.” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதன் சில பகுதிகள்: இன்று ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி, ஒவ்வொருவர் மனதிலும் மூவர்ணக்கொடி உள்ளது. இந்த சுதந்திர தினத்தில் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய மகாத்மா காந்தி மற்றும் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களுக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்துக்குப் பிறகு செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கும் தருணம் இது. புதிய தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு தேசம் உற்சாகத்துடனும் ஆர்வமுடனும் முன்னேறி வருகிறது.
2047க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரிய கனவை இந்தியா கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு வளர்ந்த நாடாக மாறத் தீர்மானிக்கும்போது அது நமது துணிச்சலின் அடையாளமாக அமைகிறது. உலகம் நம்மை மாறுபட்ட கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தி 4 மடங்கும், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை உற்பத்தி 5 மடங்கும், மின்னணு சாதன உற்பத்தி 7 மடங்கும் அதிகரித்துள்ளன. அலைபேசி உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனை 100 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.
சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில் பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லையை அகலமாக்குகின்றன. நமது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். உறுதிப்பாடு உறுதியாக இருக்கும்போது சிரமங்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும்கூட முன்னேறுவதற்கான வழியை உருவாக்கும் திறன் இயல்பாகவே உருவாகிறது.
சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது அதாவது 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே நமது தொலைநோக்குப் பார்வை. நாம் அதை அடைய வேண்டும். நமது 140 கோடி மக்களின் கூட்டு முயற்சியாலும், அயராத உழைப்பு மனப்பான்மையாலும் இந்த இலக்கு எட்டப்படும்.
கடந்த 12 ஆண்டுகளில் எண்ணற்ற குடிமக்கள் தங்களின் அசைக்க முடியாத உறுதி மற்றும் அர்ப்பணிப்புடன் நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் பாடுபட்டுள்ளனர். இத்தகைய முயற்சிகளை நான் மிகுந்த மரியாதையுடன் அங்கீகரிக்கிறேன்.
எரிசக்தி பாதுகாப்பு என்பது காலத்தின் கட்டாயமாகும். 2047க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தித் திறனை எட்டும் இலக்குடன் நாம் முன்னேறி வருகிறோம். இந்த தசாப்தத்தில் ஐந்து புதிய அணுமின் உலைகளை தொடங்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம்.
நாடு சுதந்திரம் பெற்றது. அந்த சுதந்திரம் பல கனவுகளுடன் கூடியதாக இருந்தது. இருப்பினும், நம்மால் போதுமான வேகத்தையோ அல்லது உத்வேகத்தையோ பெற முடியவில்லை. நடக்கும்; நடந்துவிடும்; பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மையிலேயே நாம் தேங்கிவிட்டோம்.
உலகம் முழுவதும் பலவீனமான ஐந்து நாடுகளின் பட்டியலல் நம்மை சேர்திருந்தது. அந்த சூழலிலும் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. நாம் மிக வேகமாக முன்னேறி வருகிறோம். நமது 140 கோடி மக்களின் உறுதிப்பாடு எத்தகையது என்றால், நமது கூட்டுத் தீர்மானத்தையும் திறனையும் இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.
சாமானிய மக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு இதே தீவிரத்துடன் பணியாற்றி உள்ளது. முன்பைவிட சராசரியாக ஆண்டுக்கு 15 மடங்கு வேகத்தில் குழாய் வழி குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளோம். முந்தைய ஆண்டு வேகத்தைவிட ஆறு மடங்கு வேகத்தில் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏழைகளுக்கான கழிப்பறைகளை ஆண்டுக்கு நான்கு மடங்கு வேகத்திலும், பின்தங்கிய பிரிவினருக்கு வீடுகளை மூன்று மடங்கு வேகத்திலும் கட்டிக் கொடுத்துள்ளோம்.
நிர்வாகத்திலும் நாடு மிகப் பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஆயிரக்கணக்கான விதிமுறைகள், நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. காலாவதியான நூற்றுக்கணக்கான சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.
நவீன உள்கட்டமைப்பை உருவாக்க மெட்ரோ ரயில் வலைப்பின்னல்களை விரிவுபடுத்தினோம். பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தினோம். இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேகம் மற்றும் அளவு ஆகியவை சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக காணப்பட்ட ஒரு மாற்றத்தை பிரதிபலிக்கின்றன. இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்தவை.
12 ஆண்டுகளுக்கு முன்பு, குழாய் வழி எரிவாயு வசதி 70 நகரங்களில் மட்டுமே இருந்தது. கடந்த 12 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 700 நகரங்களாக உயர்ந்துள்ளது. இன்று, நாட்டில் 1.75 கோடி குடும்பங்கள் குழாய் வழி எரிவாயு இணைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
சுயசார்பு இந்தியா என்பது மிக முக்கியமானது. இந்தியா இனி மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கக்கூடாது; நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாற வேண்டும் என்பதே எங்கள் உறுதியான நம்பிக்கையாக உள்ளது. நாம் நமது சொந்தத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் மற்றும் நமது நலன்களை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த உறுதியுடன், ‘சுயசார்பு இந்தியா’ நோக்கி நாம் உறுதியாக முன்னேறி வருகிறோம். ஒவ்வொரு இந்தியரும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வது’ (Make in India), ‘சுதேசி’ மற்றும் ‘உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை’ போன்ற முன்னெடுப்புகளுடன் இணைந்து வருகின்றனர்.
இன்றைய டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உலகில், ‘சிப்’களின் (semiconductor chips) அளப்பரிய முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம். மின்னணுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் அல்லது போக்குவரத்து அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், சிப்கள் இன்றியமையாதவை. அவை இல்லாவிட்டால் உலகம் ஸ்தம்பித்துவிடும். இத்துறையில் இந்தியா சுயசார்பை நோக்கி நகர்ந்துள்ளது. ஏற்கனவே மூன்று பெரிய செமிகண்டக்டர் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் ஏற்றுமதிக்கான உற்பத்தி அந்த ஆலைகளில் தொடங்கிவிட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7-8 ஆண்டுகளில், மேலும் ஐந்து முதல் எட்டு செமிகண்டக்டர் ஆலைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.
கடந்த 10-12 ஆண்டுகளில், நாம் பல ஆபத்துகளை எதிர்கொண்டுள்ளோம். கோவிட் பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வந்த உடனேயே, உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் போர்கள் தொடங்கிய செய்திகள் வந்தன. பதற்றமான சூழல் நிலவியது. கணிப்பாளர்கள் என்னென்ன கணிப்புகளைச் சொன்னார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்!
தடுப்பூசிகள் கிடைக்காது என்றும், நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் உரங்கள் கிடைக்காது என்றும் வதந்திகளைப் பரப்பி, நாட்டை அச்சத்தில் ஆழ்த்துவதில் சிலர் மகிழ்ச்சி அடைந்தார்கள். நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்குவதில் சிலர் மகிழ்ச்சி கண்டனர்.
இன்று நாடு கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கிறது. இது ஒரு தவறான மனநிலையின் விளைவாகும். இந்த மனநிலை காரணமாக, நமது கடற்கரைப் பகுதியில் 99% பகுதி ‘அணுகக்கூடாத பகுதி’யாக வகைப்படுத்தப்பட்டிருந்தது என்பதை அறியும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கடலின் ஆழத்தில் ஆய்வு செய்வதை நாம் தவிர்த்திருந்தோம்.
அது சிந்தனை வறுமையின் அடையாளம். நிலைமை இப்படித் தொடரக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம். ஒரு காலத்தில் ‘அணுகக்கூடாத மண்டலங்களாக’ இருந்த 99% பகுதிகளை, இப்போது ‘செயல்பாட்டிற்கு உகந்த மண்டலங்களாக’ நாங்கள் திறந்துவிட்டுள்ளோம். இப்போது நாம் ஆழ் கடல் ஆய்வு மற்றும் புதிய வளங்களைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
கடந்த ஆண்டு, இத்திசையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக ‘சமுத்ரா மந்தன்’ (Samudra Manthan) முயற்சியை நாங்கள் அறிவித்தோம். அண்மையில், இதற்காக ₹85,000 கோடி நிதியை ஒதுக்கி இப்பணிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இந்தியா ஒரு நிலையான அரசியல் ஆணையை; நிலையான அரசாங்கத்தை; துடிப்பான ஜனநாயகத்தை; வலுவான நீதித்துறையை; நம் அனைவரையும் வழிநடத்தும் அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. நாங்கள் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று நான் கூற விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

More Stories
“பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்”: சுதந்திர தின உரையில் கார்கே சாடல்
“தேர்வுகளுக்கு இலவச பயிற்சி, ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி” – பிரதமர் மோடி அறிவிப்பு
ஜப்பானில் வரலாறு காணாத கனமழை.. 7,000 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!