June 6, 2026

இந்திய காலனியாக மாறிவிட்டதா கனடாவின் டொராண்டோ நகர்? – வைரலாகும் நடன வீடியோவால் சர்ச்சை

டொராண்டோ: க​ன​டா​வின் டொராண்டோ நகரில் இந்திய இளைஞர்கள் குழு​வாக இணைந்து பொது​வெளி​யில் நடன​மாடிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்​களில் காட்​டுத்​தீ​யாகப் பரவி, பெரும் விவாதத்​தை​ கிளப்​பி​யுள்​ளது.

சமீப​கால​மாக கனடா​வில் இந்​தி​யர்​களின், குறிப்​பாக பஞ்​சாப் மாநிலத்​தைச் சேர்ந்​தவர்​களின் எண்​ணிக்கை மிக வேக​மாக அதிகரித்து வரு​கிறது. இந்​நிலை​யில், இந்த வீடியோ அங்​குள்ள உள்​ளூர் மக்​களிடையே கடுமை​யான அதிருப்​தியை ஏற்படுத்தியுள்​ளது.

டொராண்​டோ​வின் பரபரப்​பான வணிக வளாகப் பகுதி ஒன்​றில், இந்​திய வம்​சாவளி இளைஞர்​கள் பலர் ஒன்று கூடி, உரத்த ஒலி​யில் பஞ்​சாபி பாடல்​களை ஒலிக்​க​விட்​டு, பாரம்​பரிய ‘பங்க்​டா’ நடனமாடி கொண்​டாடி​ உள்​ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளி​யானதைத் தொடர்ந்​து, விவாதங்கள் தொடங்​கின.

இந்த வீடியோவைப் பகிர்ந்த பல கனடா நாட்டு நெட்​டிசன்​கள், “கனடா நாடு மெல்ல மெல்ல இந்​தி​யா​வின் ஒரு காலனி​யாக மாறி வரு​கிறது” என்று மிகக் காட்​ட​மாக விமர்​சித்​துள்​ளனர்.

உள்​ளூர் கலாச்​சா​ரம் மற்​றும் பொது ஒழுங்​கிற்கு மதிப்பளிக்காமல், பொது​மக்​களுக்கு இடையூறு விளைவிக்​கும் வகை​யில் இது​போன்ற செயல்​களில் ஈடு​படு​வது ஏற்​றுக் கொள்ள முடி​யாதது என்று அவர்​கள் வாதிடு​கின்​றனர். “நாங்​கள் கனடாவில் வாழ்​கிறோமா அல்​லது இந்​தி​யா​வின் ஏதேனும் ஒரு மாநிலத்​தில் வாழ்​கிறோமா என்ற சந்​தேகம் எழுகிறது” என்​றும் சிலர் தங்​களது எக்ஸ் பக்​கத்​தில் பதி​விட்​டுள்​ளனர்.

அதே நேரத்​தில், இந்த விமர்​சனங்​களுக்​குப் பதிலடி கொடுக்​கும் வகை​யில் இந்​திய வம்​சாவளி​யினரும், பன்​முகத்​தன்​மையை ஆதரிப்​பவர்​களும் கருத்து தெரி​வித்து வரு​கின்​றனர். கனடா என்பது பல நாட்டு கலாச்​சா​ரங்​களை உள்​ளடக்​கிய ஒரு நாடு என்றும், அங்கு தங்​களது கலாச்​சா​ரத்​தைக் கொண்​டாடு​வதற்கு அனை​வருக்​கும் உரிமை உண்டு என்​றும் அவர்​கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்​டு​களாகவே கனடா​வில் நிலவி வரும் வீட்​டு​ வசதி தட்​டுப்​பாடு மற்​றும் வேலை​வாய்ப்பு நெருக்​கடிகளுக்​கு, கட்டுப்பாடற்ற வெளி​நாட்டு குடியேற்​றங்​களே காரணம் என்ற கருத்து அந்​நாட்டு மக்​களிடையே வலுத்து வரு​கிறது. இத்​தகைய இக்​கட்​டான அரசி​யல் மற்​றும் சமூகச் சூழலில், இந்த நடன வீடியோ அங்​குள்ள குடியேற்​ற​வாசிகளுக்கு எதி​ரான வி​வாதத்​தை மேலும்​ தீவிரப்​படுத்​தியுள்​ளது.

Spread the love