திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர் தொடர்ந்தார்
திருப்பதி: இந்து கடவுள்களை அவமானப்படுத்தி யார் பேசினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி எச்சரித்துள்ளார். இவர் நடிகர் பிரகாஷ்ராஜ் மீதும் ரூ.100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்துள்ளார்.
அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜகவின் ஆந்திர மாநில செய்தித் தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி, சமீபத்தில் ராமர், லட்சுமணர் பற்றி கேலியாக பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் மீது ரூ. 100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென ஆந்திர டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பானு பிரகாஷ் ரெட்டி கூறியதாவது: இந்து கடவுள்கள், இந்து கலாச்சாரங்களை கொச்சை படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பேசுவது பலருக்கு வாடிக்கையாகி விட்டது. அப்படி பேசுபவர்களின் பேச்சை இனி கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. சமீபத்தில் இந்து கடவுள்களை இழிவாகவும், கேலியும், கிண்டலுமாக பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் மீதும் ரூ.100 கோடிக்கு மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிலர் இதையே பிழைப்பாக வைத்துக்கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் பேசுகின்றனர். சனாதன தர்மத்தை யார் தரக்குறைவாக பேசினாலும் நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம். கோயில்கள் என்பது மதசார்பற்ற இடம் கிடையாது. அது இந்துக்களுக்கு மட்டுமானது. இனி கோயில்களில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். வியாபாரங்களும் இந்துக்கள் மட்டுமே செய்ய வேண்டும்.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலிலும் வேற்று மதத்தினர் பலர் பணியாற்றுகின்றனர் எனும் தகவல்கள் வருகின்றன. இது குறித்தும் ஆந்திராவில் கூட்டணி அரசு ஆலோசித்து முடிவெடுக்கும். ஆந்திராவில் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்தியில் உள்ள பாஜகவின் ஆட்சியால் நாட்டில் இந்து கோயில்கள், கலாச்சாரத்திற்கு பாதுகாப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
மேற்கு வங்க தேர்தலில் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை
இந்திய வான்வெளியில் பறப்பதற்கு பாகிஸ்தான் விமானங்களுக்கு மே 24 வரை தடை நீட்டிப்பு
“ஓட்டுரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும்” – நடிகர் ரஜினிகாந்த்