புதுடெல்லி: ஓமன் கடலோர பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்திய தாக்குதலில் 3 இந்தியமாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப்படை முற்றுகையிட்டுள்ளது. ஈரான் துறைமுகங்களை நோக்கி கப்பல்கள் செல்வதையும், ஈரான் துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் வெளியேறுவதையும் அமெரிக்கப்படை தடுத்து, ஈரான் வருவாயை முடக்கி போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பாலாவ்கொடி பொருத்தப்பட்ட ‘செட்டெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஈரான் துறைமுகத்துக்கு நுழைய முயன்றது. இதில் உள்ள 28 மாலுமிகளில் 24 பேர் இந்தியர்கள். இந்த கப்பலுக்கு பிறப்பித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்க முயன்றதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து இந்த கப்பலின் இன்ஜின் அறை மீது அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி முடக்கியது. இதில் இந்திய மாலுமிகள் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா, தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் கூறுகையில், ‘‘செட்டோபெல்லோ என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது.
இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு மோடி அரசு துணை நிற்கிறது. மீட்கப்பட்ட இந்திய மாலுமிகள் உடனடியாக நாடு திரும்புவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த மாலுமிகளின் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக இந்தியா கொண்டு வரப்படும்’’ என்றார்.
இந்தியா கண்டனம்
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மிகுந்த கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ள இந்தியா, இப்பகுதியில் போர் பதற்றம் உடனடியாக குறைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்கதூதரை அழைத்து, இந்திய மாலுமிகள் மீதான தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

More Stories
அமெரிக்கா–ஈரான் போருக்கு முடிவு? ஐரோப்பாவில் கையெழுத்தாக வாய்ப்பு – அதிபர் ட்ரம்ப் கொடுத்த அப்டேட்
“ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்..” ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.. பரபரப்பில் மத்திய கிழக்கு!
அமெரிக்க ராணுவ தலைமையகம் அவசர அவசரமாக மூடல்: ஊழியர்கள் வெளியேற்றம்