சென்னை: கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள கட்டண தரிசன முறையை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமிழகம் முழுவதும் சுமார் 65 முக்கிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில், சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் மணலி மனோகர், தென்பாரத அமைப்பாளர் பக்தன் ஜி, மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.டி. இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் மணலி மனோகர் கூறியதாவது: கோயில்களில் வசூலிக்கப்படும் தரிசனக் கட்டணங்களை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது இந்து முன்னணியின் தொடர்ச்சியான கோரிக்கையாகும். இறைவனுக்கு முன்னால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இருக்கக்கூடாது.
அனைவரும் சமமாகவே நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு ஆடு, மாடுகளை இலவசமாக வழங்குகிறது; மகளிருக்குப் பேருந்து பயணம் இலவசம், 200 யூனிட் மின்சாரம் இலவசம் எனப் பல்வேறு சலுகைகளை அளிக்கிறது.
ஆனால், கோயிலில் கடவுளைத் தரிசிக்க மட்டும் பணம் செலுத்த வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஆன்மீக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்துக் கோயில்களிலும் கட்டணமில்லா தரிசனத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More Stories
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
“இலாகா அனுமதி தருவதில் காலதாமதம் ஏன் என்று எனக்கே தெரியவில்லை” – முதல்வர் ரங்கசாமி
சிவ சேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து