April 22, 2026

“சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ செய்த பணிகள் குறித்த ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு கணபதியில் நேற்று நடந்தது. நிகழ்வில் பங்கேற்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, கோவை வடக்கு பாஜக வேட்பாளர் வானதிசீனிவாசன் உள்ளிட்டோர்.

கோவை: தமிழகத்தில் ‘சூப்பர் சிஎம்’ ஆக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செயல்படுகிறார் என அண்ணாமலை கூறினார். கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ வானதிசீனிவாசன் மேற்கொண்ட சிறப்பு பணிகள் குறித்த தன்னார்வ அமைப்பின் ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு, கோவை கணபதியில் நேற்று நடந்தது.

நிகழ்வில் பங்கேற்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தி யாளர்களிடம் கூறியதாவது: வானதி சீனிவாசன் கோவையின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 5 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.

தற்போது நலமோடு களத்திற்கு வந்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் அமுதம் திட்டம் மூலம் குழந்தை பெற்ற தாய்மார்கள் 2500 பேருக்கு பசும்பால் வழங்கினோம். இதம் திட்டம் மூலம் இலவச நாப்கின்கள் பெண்களின் வீடுகளுக்கே இலவசமாக வழங்கப்பட்டது.

சுயம் திட்டம் மூலம் 1500 பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றி உள்ளோம். மோடி மகள் திட்டம் மூலம் தந்தை இல்லாத 150 பெண்களுக்கு கல்வி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது உடை, பட்டாசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. வாட்டர் ஏடிஎம் மூலம் சுத்தமான தண்ணீர் தெற்கு தொகுதியில் வழங்கி உள்ளோம்.

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ-வாக அவர் வந்தால், இதுபோல பல திட்டங்களை கொண்டு வருவார். முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அரசு அதிகாரிகள் உடன் செல்கிறார்கள்.

அரசு இயந்திரத்தை பயன்படுத்துகிறார். தோல்வி பயத்தால் இத்தனை நாட்கள் களத்துக்கு வராத சபரீசன் தற்போது வருகிறார். அவர் சூப்பர் சி.எம். ஆக செயல் படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Spread the love