தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சி, முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் காரணமாக பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் தமிழக அரசு ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற புதிய காவல் பிரிவை அறிவித்து உள்ளது.
சிங்கப்பெண் அதிரடிப்படை
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பெண்கள் பாதுகாப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கையாக இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் தனது இரண்டாவது கையெழுத்தை பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த திட்டம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சிறப்பு அதிரடிப்படையின் முதல் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பிரிவு நேரடியாக முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
30 போலீசார்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, இரண்டு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், நான்கு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் இடம்பெற உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவசர புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் இந்த படை செயல்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த படை வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு படை சோதனை
தமிழகத்தில் முதன்முறையாக சேலம் உள்ளிட்ட சில மாநகரங்களில் இந்த சிறப்பு படை சோதனை அடிப்படையில் பணியை தொடங்கி உள்ளது. சேலம் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி மேற்பார்வையில் கடந்த மே 14 ஆம் தேதி இந்த படையினர் தங்களது கண்காணிப்பு பணியை ஆரம்பித்தனர். அவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய வாகனங்கள், உடலில் பொருத்தும் கேமராக்கள் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டு உள்ளன.
Ex ADSP Anusya பேட்டி: காவல்துறையில் உள்ள Pressure பற்றி வெளிச்சம்!மேலும் ‘சிங்கப்பெண்’ படையினருக்காக தனித்துவமான சின்னம் மற்றும் புதிய சீருடை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த படையின் பெயரையும் ஐஜி பவானீஸ்வரியே பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழா
இந்த நிலையில், சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று (மே 27 ஆம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெற இருந்த தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்து கொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
தொடக்கவிழா ஒத்திவைப்பு
ஆனால் முதலமைச்சர் விஜய் இன்று (மே 27 ஆம் தேதி) டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள விஜய், தமிழக வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக விரிவான மனுவை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

More Stories
டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்க அரசு உத்தரவு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ கோரிக்கை மனு
முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம் – பிரதமர் மோடியை சந்திப்பதாக தகவல்