சென்னை: சீனாவில் நடந்த உலகத்திறன் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற முகமது சலாமுக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை, சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற ராகுல், அர்ஜுன், சுரேந்திரன், ஜாய் தாஸ் ஆகிய 4 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை, போட்டிகளில் பங்கேற்ற சுரேஷ் குமார், கோகுலகண்ணன், முகமது மபாஜ், அஸ்வின், ரோஹித், தனுஸ்ரீ மகேஷ், மோகன்ராஜ் ஆகிய 7 பேருக்கு தலா ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை என மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு ரூ.49 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதற்்கான காசோலைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் நேற்று வழங்கி பாராட்டினார். உலகத் திறன் போட்டிகளில் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், ஓட்டல் மேனேஜ்மெண்ட், மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் பணிபுரியும் இளைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்பதற்கு, முதலில் தமிழ்நாடு மாநில அளவில் பல்வேறு நிலைகளில் நடைபெறும் தமிழ்நாடு திறன் போட்டிகளில் வெற்றி பெற்று, பின்னர் தென் மண்டல அளவிலான திறன் போட்டிகளிலும் வெற்றி பெற்று, தேசிய அளவிலான திறன் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்களது மாணவ, மாணவியர்களிடையே இத்திறன் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவ, மாணவியர்கள் பெருமளவில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டுமென முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
உலகத் திறன் போட்டிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் உதவி எண்கள் 9962220527 மற்றும் 9962220528 ஆகியவற்றை தொடர்பு கொண்டும், www.skilldevelopment.tn.gov.in/tnskills/ என்ற இணையதளம் மூலமாகவும் அறியலாம்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சாய்குமார், சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
ரூ.400 கோடி மோசடி வழக்கு: முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமின் மனு விசாரணை நவம்பர் 2-க்கு தேதிக்கு ஒத்திவைப்பு!!
தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் போலீஸாரிடம் சிக்கினர்