October 31, 2026

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

கடந்த 26ம் தேதி பவுன் தங்கம் ஒரு லட்சத்து 4680க்கு விற்பனையானது. 27ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் 1 லட்சத்து 5 ஆயிரத்து 80க்கும், 28ம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு பவுன் 1 லட்சத்து 5,560 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று முன்தினம் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.13,195க்கும், ஒரு பவுன் 1 லட்சத்து 5560க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.215க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்னையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,040க்கும், பவுனுக்கு ரூ.1240 குறைந்து, ஒரு பவுன் 1 லட்சத்து 4320க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.210க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.10 லட்சத்துக்கும் விற்பனையானது. வரும் வாரத்தில் தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். இந்த பணத்தை பயன்படுத்தி சிலர் குறைந்த அளவிலாவது தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.310 குறைந்து ஒரு கிராம் ரூ.12,730க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.200க்கும் விற்பனையாகிறது.

Spread the love