சென்னை: சென்ட்ரல் நிலையம் அருகே பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநில சிறுமியை கடத்திச் சென்ற பெயின்ட்டரை, ஆட்டோ ஓட்டுநர் சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தியதால், போலீஸார் சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷனிஜல் தாஸ் (56). இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருச்சியில் தங்கி விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார்.
ரயில் புறப்படும் நேரம் வரை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர், தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை தோளில் தூக்கிக்கொண்டு வால்டாக்ஸ் சாலை நோக்கி நடந்து சென்றுள்ளார்.
இதைப் பார்த்து சந்தேகமடைந்த அந்த வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர், அந்த நபரிடம் விசாரித்தார். அப்போது, அந்த நபர் தமிழில் பதிலளித்த நிலையில், குழந்தை இந்தியில் பேசியதோடு, அழவும் செய்துள்ளது.
இதனால், சந்தேகம் அதிகரித்தது. சுதாரித்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர், உடனடியாக இதுகுறித்து யானைக்கவுனி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து விசாரித்தனர். இதில், சிறுமி கடத்திச் செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறுமியை மீட்டு, கடத்திச் சென்ற நபரை பிடித்து பெரியமேடு காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில், சிறுமியை கடத்தியவர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த பெயின்ட்டர் சசிகுமார் (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆட்டோ ஓட்டுநரின் சாமர்த்தியம் மற்றும் போலீஸாரின் துரித நடவடிக்கையால் கடத்தி செல்லப்பட்ட சிறுமி அரை மணி நேரத்தில் மீட்கப்பட்டார்.
இதனால், நெகிழ்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், குழந்தையை விரைந்து மீட்டுக் கொடுத்த போலீஸாருக்கும், தகவல் தெரிவித்து உதவிய பெரியமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

More Stories
”அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு கூடாது; கடும் கண்டனம் தெரிவிப்போம்” – அமைச்சர் நிர்மல்குமார்
தமிழ்நாட்டிற்கு இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கப்படவில்லை? பின்னணியில் நடக்கும் அரசியல் நகர்வுகள்- இதுதான் காரணம்
கட்டாய பணி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு அரசு சாரா மருத்துவர்கள் போராட்டம்