மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், ஸ்டெர்லைட் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்த நிலையில், 2 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒன்றில் 101 பேர் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மற்றொன்றில் ஒரு காவல் ஆய்வாளர் மீது மட்டும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
இருப்பினும் அதன் பின்னரும் அதே காவல் ஆய்வாளரின் மீது மட்டும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், காவல் ஆய்வாளர் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து கீழமை நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 13 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தொடர்பான விவகாரமும் கீழமை நீதிமன்றத்தில் உள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்தது.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. ஆணையம் அளித்த அறிக்கை ஏற்கப்பட்டதா? அந்த அறிக்கை அடிப்படையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதா? இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது ஏதேனும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும். விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

More Stories
கர்நாடகா பந்த்: அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் – தமிழக பேருந்துகள் சிறிது நேரம் நிறுத்தம்
ஈரானிய கடற்கொள்ளையர் அட்டூழியம்: துப்பாக்கிச்சூட்டில் சீர்காழி மீனவர் உயிரிழப்பு
கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் அப்சரா அறிவிப்பு