May 18, 2026

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல்

சென்னை: நீட் தேர்​வில் ஏற்​பட்​டுள்ள குளறு​படிகளைக் கண்​டித்​தும், நீட் தேர்வை முற்​றி​லு​மாக ரத்து செய்ய வலி​யுறுத்​தி​யும், தமிழ்​நாடு மாநில இளைஞர் காங்​கிரஸ் சார்​பில், சென்​னை​யில் ரயில் மறியல் போராட்​டம் நடை​பெற்​றது.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்த விவ​காரத்​தால் லட்​சக்​ கணக்​கான மாணவர்​கள் கடுமை​யாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்​குப் பொறுப்​பேற்று மத்​திய அரசு உரிய நடவடிக்கை எடுக்​கக் கோரி, இந்த ரயில் மறியல் போராட்​டம் நடத்​தப்​பட்​டது.

சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் நடை​பெற்ற இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்​கு, தமிழ்​நாடு மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் சூர்யா பிர​காஷ் தலைமை தாங்​கி​னார். இதில், நூற்​றுக்​கணக்​கான இளைஞர் காங்​கிரஸ் தொண்​டர்​கள் கலந்​து கொண்​டனர்.

போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​கள், சென்னை எழும்​பூரில் இருந்து திருநெல்​வேலி நோக்​கிப் புறப்​படத் தயா​ராக இருந்த ‘வந்தே பாரத்’ ரயிலை மறித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மத்​திய பாஜக அரசைக் கண்​டித்​தும், நீட் தேர்வை உடனடி​யாக ரத்து செய்​யக் கோரி​யும், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானை பதவி விலக வலி​யுறுத்​தி​யும் கைகளில் பதாகைகளை ஏந்தி அவர்​கள் கோஷங்​களை எழுப்​பினர்.

இந்த திடீர் மறியல் போராட்​டத்​தின் காரண​மாக, நெல்லை வந்தே பாரத் ரயில் எழும்​பூர் நிலை​யத்​தில் இருந்து சுமார் 10 நிமிடங்​கள் தாமத​மாகப் புறப்​பட்​டுச் சென்​றது. பின்னர் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை காவல்​துறை​யினர் கைது செய்​தனர்.

இதுகுறித்​து, சூர்யா பிர​காஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “மத்​திய அரசு நடத்​தும் நீட் தேர்​வில் தொடர்ந்து பல்​வேறு குளறு​படிகளும் முறை​கேடு​களும் அரங்​கேறி வரு​கின்​றன.

வினாத்​தாள்​கள் கசிந்​ததன் காரண​மாக, லட்​சக்​கணக்​கான மாணவர்​களின் எதிர்​காலம் கேள்விக்​குறி​யாகி உள்​ளது. கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்​சி​யில், போட்​டித் தேர்​வு​களின் வினாத்​தாள்​கள் 80-க்​கும் மேற்​பட்ட முறை கசிந்​துள்​ளன.

தமிழகத்​தில் நீட் தேர்வு எழுதச் செல்​லும் நமது மாணவ, மாணவி​களைத் தேர்வு மைய வாசலில் வைத்​துப் பாது​காப்பு என்ற பெயரில் கடுமை​யான சோதனை​களுக்கு உள்​ளாக்​கு​கிறார்​கள். அவர்​கள் அணிந்​திருக்​கும் சிறிய கம்​மல், கொலுசு உள்​ளிட்ட நகைகளைக் கூடகழற்​றச் சொல்லி மன உளைச்​சலை ஏற்​படுத்​துகிறார்​கள்.

ஆனால், வட மாநிலங்​களிலோ வினாத்​தாள்​கள் மிகச் சாதா​ரண​மாகத் தொடர்ந்து கசிந்து வரு​கின்​றன. எனவே, தேர்வு முறை​கேடு​களுக்​குக் காரண​மான தேசிய தேர்வு முகமையை உடனடி​யாகத் தடை செய்ய வேண்​டும்.

இந்த வினாத்​தாள் கசிவுக்​குப் பொறுப்​பேற்று பிரதமர் மோடி​யும், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானும் உடனடி​யாகத்​ தங்​களது பதவி​களை ராஜி​னா​மா செய்​ய வேண்டும்” என்றார்.

Spread the love