மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தேர்தலில் கர்நாடகாவில் இருந்து மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நேற்று எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே (84), கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வந்தார். அவருடைய பதவிக் காலம் அண்மையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று நாடாளுமன்றத்தில் அவர் முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ் வாதி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை வலுவாக ஒலிப்பதிலும், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுவதிலும் கார்கேவின் அனுபவம் மிக முக்கியமானது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

More Stories
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளை ஈர்க்க ரூ.14 கோடி வரை உதவித் தொகை
தங்கம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்த மக்கள் – ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு
‘ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தால் அயோத்திக்கு பக்தர்கள் வருகை, காணிக்கை குறைந்தது’