February 21, 2026

மோடி சிறந்த மனிதர்! இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: டிரம்ப் விளக்கம்!

மோடி சிறந்த மனிதர் என்றும் இனி இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது என அதிபர் டிரம்ப் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா உறவு

இந்தியா – அமெரிக்கா உறவு

அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் எதுவும் மாறவில்லை, இந்தியா வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது, பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா உள்பட உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்கள் கூட்டத்தில் செய்தியாளர் ஒருவர் இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது இந்த விளக்கத்தை கூறினார்.

அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஏஎன்ஐ செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “எதுவும் மாறவில்லை. இந்தியா வரிகளை செலுத்தும், அமெரிக்கா வரிகளை செலுத்த வேண்டியதில்லை… பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர். அமெரிக்காவைப் பொறுத்தவரை அவர் எதிர்த்தவர்களை விட அவர் மிகவும் புத்திசாலி… எனவே நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தோம்… அந்த ஒப்பந்தத்தின் மூலம் நாங்கள் இந்தியாவுக்கு வரிகளை செலுத்தமாட்டோம். அவர்கள் செலுத்துவார்கள். ஏற்கனவே இருந்த நிலையை நாங்கள் கொஞ்சம் தலைகீழாக மாற்றினோம்” என்று கூறுகிறார்.

மேலும், இந்தியா – அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் எந்த மாற்றமும் ஏற்படாதா? ஒப்பந்தம் அப்படியே நீடிக்குமா? என்று செய்தியாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதற்கு, ஆமாம், எந்த மாற்றமும் இல்லை. அந்த வர்த்தக ஒப்பந்தம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படும் என்று டிரம்ப் பதிலளித்தார். இது சிறந்த வர்த்தக ஒப்பந்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அதிரடியாக பல உத்தரவுகளைப் பிறப்பித்தார். அமெரிகக் நலன் மட்டுமே முக்கியம் என்ற அறைகூவலுடன், உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் பரஸ்பர வரிகளை விதித்தாா். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாவதால் ஏற்படும் வா்த்தகப் பற்றாக்குறையைக் கையாளும் வகையில், இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். அது மட்டுமல்லாமல், அவரது கட்டளைகளை ஏற்காத நாடுகள் மீது 50 சதவீதம், 100 சதவீதம் என வரிகளை விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

அந்த வகையில், இந்தியப் பொருள்கள் மீது 25 சதவீத பரஸ்பர வரி, ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியப் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா-இந்தியா இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையின் விளைவாக, அது 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் இந்திய ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

உலக நாடுகள் மீதான இந்தப் பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியினா், வணிகா்கள் உள்பட பலா் வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபா்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமா்வு நேற்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை அளித்திருந்தது. அந்த அமா்வில் 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘ வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை. எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது’ என்று தீா்ப்பளித்திருந்தனர்.

இந்த தீர்ப்பினால், டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்குப் பிறப்பித்த வரி விதிப்புகள் தளர்வு பெறும் என இந்திய தொழில் அமைப்பினர் நினைத்திருந்த நிலையில், அமெரிக்கா – இந்தியா இடையே கையெழுத்தா வர்த்தக ஒப்பந்தம் எந்த மாற்றமும் இன்றி நடைமுறைப்படுத்தப்படும் என டிரம்ப் அறிவித்ததோடு, பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த மனிதர் என புகழாரமும் சூட்டியிருக்கிறார்.

Spread the love