மாஸ்கோ: இந்திய, ரஷ்ய வர்த்தக, பொருளாதார அறிவியல், தொழில்நுட்ப, கலாச்சார கூட்டமைப்பின் 27-வது மாநாடு மாஸ்கோவில் கடந்த 23, 24-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, அவர் நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, “இந்தியா, ரஷ்யா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. வர்த்தகம், எரிசக்தி, உரங்கள், அணு சக்தி துறைகளில் இரு நாடுகள் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது. டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும்போது, “பல்வேறு துறைகளில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகின்றன. இந்திய விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தொடர்ந்து விநியோகம் செய்வோம். இரு நாடுகள் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
பின்னர் ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறும்போது, “ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடு இந்தியா. வரும் செப்டம்பரில் டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பார்” என்று தெரிவித்தார்.

More Stories
விலை உயர்வைக் கட்டுப்படுத்த ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ சிறப்பு ரயில்களை இயக்கும் மத்திய அரசு
30 மூட்டைகளில் ரூ.30 லட்சம் – யாசகம் பெற்று வாழ்ந்து மறைந்த மூதாட்டி வீட்டில் கண்டெடுப்பு
உ.பி.யில் காணாமல் போன 5 அரசு பள்ளிகளை தேடித் தந்தால் ரூ.1 லட்சம் பரிசு: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அறிவிப்பு