பெங்களூரு: கர்நாடகாவில் யாசகம் பெற்று வாழ்ந்த மூதாட்டி இறந்ததை தொடர்ந்து அவரது வீட்டை ஆராய்ந்த போது 30 மூட்டைகளில் ரூ.30 லட்சம் ரொக்கப் பணம் சேமித்து வைத்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள குதாலு பகுதியை சேர்ந்தவர் ஹூர் உன்னிசா (68). இவர் அங்குள்ள மசூதியின் வாயிலில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது வீட்டை மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் கிராமத்தினர் ஆராய்ந்தனர். அப்போது 30-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் கட்டுக்கட்டாக ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 நோட்டுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர 3 மூட்டைகளில் நாணயங்களும் வைக்கப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இதையடுத்து மசூதி நிர்வாகத்தினர் அந்த பணத்தை மசூதிக்கு கொண்டு சென்று பொதுமக்கள் முன்னிலையில் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முதல் நாள் முடிவில் 10 மூட்டைகளில் இருந்து ரூ.8.24 லட்சத்தை எண்ணி முடித்தனர். மறுநாளான நேற்று 6 பேர் எஞ்சிய பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதன் முடிவில், 30 மூட்டைகளில் மொத்தமாக ரூ.30.12 லட்சம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஹூர் உன்னிசாவின் இரு சகோதரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் ஒருவர் ரூ.6 லட்சம் பெற்றுக்கொண்ட நிலையில், மற்றொருவர் ரூ.2.5 லட்சத்தை மசூதியின் வளர்ச்சி பணிகளுக்கு வழங்கினார்.
எஞ்சியுள்ள பணத்தை ஹூர் உன்னிசாவின் ரத்த சொந்தங்கள் உரிமைக் கோரலாம் என மசூதி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இதனிடையே மூதாட்டி யாசகம் பெற்று ரூ.30 லட்சம் சேமித்த செய்தியும், அந்த பணத்தை எண்ணும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

More Stories
விலை உயர்வைக் கட்டுப்படுத்த ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ சிறப்பு ரயில்களை இயக்கும் மத்திய அரசு
உ.பி.யில் காணாமல் போன 5 அரசு பள்ளிகளை தேடித் தந்தால் ரூ.1 லட்சம் பரிசு: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அறிவிப்பு
விகிதாச்சார அடிப்படையில் நீர் திறப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு