இந்திய பைலட் ஸ்மித் மச்சார் ஃபிளை துபாய் விமானத்தில் நேற்று முன்தினம் சக பைலட்டின் தாக்குதலுக்கு ஆளாகி ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையிலும், காக்பிட் கதவைத் திறந்து 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்ற உதவினார்.
இந்தச் சம்பவம் போலவே, சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காக்க தன் உயிரையே தியாகம் செய்துள்ளார் நீரஜா பானோட். இந்த சம்பவம் இப்போது வைரலாகி உள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி, மும்பையிலிருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகர் வழியாக அமெரிக்காவின் நியூயார்க் நோக்கிச் சென்ற ‘பான் அம் பிளைட் 73’ போயிங் 747 விமானம், பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
அப்போது ‘அபு நிடால்’ என்ற பாலஸ்தீன தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் விமானத்துக்குள் புகுந்து விமானத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அந்த விமானத்தில் பணியாளர்கள் உட்பட மொத்தம் 379 பேர் இருந்தனர். சுமார் 17 மணி நேரம் நீடித்த இந்த பிணைக் கைதிகள் போராட்டத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அப்போது விமானத்தின் தலைமைப் பணிப்பெண்ணாக இருந்த நீரஜா பானோட்டுக்கு வெறும் 22 வயதுதான். கடத்தல் தொடங்கியவுடனேயே நீரஜா செய்த முதல் காரியம், காக்பிட்டில் இருந்த பைலட்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பியதுதான்.
இதன் மூலம் முதன்மை பைலட்கள் தப்பிச் சென்றதால், தீவிரவாதிகளால் விமானத்தைக் கராச்சியிலிருந்து வேறு எங்கும் இயக்கி மோதி அழிக்க முடியாமல் போனது. விமானம் தரையிலேயே முடக்கப்பட்டது.
இதையடுத்து, தீவிரவாதிகள் அமெரிக்கப் பயணிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பிணைக் கைதிகளாகப் பயன்படுத்த பாஸ்போர்ட்டுகளை சேகரிக்கத் தொடங்கினர்.
ஆபத்தை உணர்ந்த நீரஜா, தனது உயிரைப் பணையம் வைத்து, அமெரிக்கப் பயணிகளின் பாஸ்போர்ட்டுகளை இருக்கைகளுக்கு அடியிலும் குப்பைத் தொட்டிகளிலும் மறைத்து வைத்து அவர்களைக் காப்பாற்றினார்.
ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு இடையே, பயந்து நடுங்கிக் கொண்டிருந்த பயணிகளுக்குத் தைரியம் கூறி அமைதிப்படுத்தினார் நீரஜா.
17 மணி நேரப் போராட்டத்தின் முடிவில், விமானத்தின் மின்சார வசதி துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்தது. தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
அப்போது நீரஜா பானோட் அவசர கால வெளியேறும் கதவின் அருகில்தான் நின்றுகொண்டிருந்தார். நினைத்திருந்தால் அவரால் முதலில் வெளியே குதித்து தனது உயிரை காப்பாற்றியிருக்க முடியும்.
ஆனால், அவர் மற்ற அனைவரையும் வெளியே தள்ளிவிட்டு, உள்ளே சிக்கியிருந்த குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகச் சென்றார்.
அப்போதுதான் தீவிரவாதியின் துப்பாக்கிக் குண்டு அவர் மீது பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த ஒரே விமானப் பணிப் பெண் நீரஜா பானோட் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தேசம் வழங்கிய கவுரவம்
நீரஜாவின் இந்த ஈடு இணையற்ற தியாகத்தைப் போற்றி, இந்தியாவின் மிக உயரிய ‘அசோக சக்ரா’ விருது அவருக்கு மரணத்துக்குப் பின் வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெற்ற முதல் பெண்ணும், மிகக் குறைந்த வயதுடைய நபரும் நீரஜாதான். மேலும் பாகிஸ்தான் அரசு ‘தம்கா-ஏ-பாகிஸ்தான்’ விருதையும், அமெரிக்க நீதித் துறை ‘சிறப்பு தைரிய விருதையும்’ அவருக்கு வழங்கி கவுரவித்தன.
சூழல்கள் வேறாக இருந்தாலும், 1986-ல் நீரஜா பானோட்டும், 2026-ல் கேப்டன் ஸ்மித் மச்சாரும் ஆபத்து நேரத்தில் காட்டிய அசாதாரணத் துணிச்
சலும், பயணிகள் உயிரைப் பாதுகாக்க எடுத்த துரித முடிவுகளுமே இந்திய வான்வழிப் போக்குவரத்து வரலாற்றில் அவர்களை அழியாத நிஜ நாயகர்களாக மாற்றியுள்ளது.

More Stories
உலகமே வியந்து பார்க்கும் இந்திய பைலட் – உயிரைப் பணயம் வைத்து வெற்றி!
‘இந்திய விமானி ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ’ – மோடி, ட்ரம்ப் புகழாரம்
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 41 பேர் கொல்லப்பட்டனர்: ஆப்கன் அரசு தகவல்