புதுடெல்லி: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) 1 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களைக் கடந்து வரலாறு படைத்துள்ளது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ மூலம் 27 கோடி புதிய பங்குகளை வெளியிட்டு ரூ.30,213 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. பங்கு விலை வரம்பு ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாட் அளவு 12 பங்குகள் ஆகும். அதிகபட்ச விலை உச்ச வரம்பின்படி, ஒரு சில்லறை முதலீட்டாளர் குறைந்தபட்சம் ரூ.13,428 முதலீடு செய்ய வேண்டும்.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை, தனது முக்கிய துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் பெற்றுள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள தொகை பொதுவான கார்ப்பரேட் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும். சில்லறை முதலீட்டாளர்களுக்கான ஏலம் கடந்த 21-ம் தேதி தொடங்கப்பட்டது.
மூன்று மடங்குக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவி்ந்தன. இந்த நிலையில், ஏலத்தின் மூன்றாவது மற்றும் கடைசி நாளான நேற்று மதியம் 12.24 மணி நிலவரப்படி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ 7.41 மடங்கு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது. இதன் மூலம், பங்குகள் வேண்டி வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. உலகளவில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐபிஓ இதுவாகும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சாதனை அறிவிக்கப்பட்டபோது ஏலத்துக்கு இன்னும் ஐந்து மணிநேரம் மீதமிருந்ததுடன், இறுதி விண்ணப்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரீ எனர்ஜிஸ் நிறுவனம் பெற்ற சுமார் 97 லட்சம் விண்ணப்பங்கள் முந்தைய சாதனையாகும்.

More Stories
பிளிங்கிட் தளத்தில் வெறும் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரூ.3 லட்சம் விலையுள்ள ஐபோன் டியோ
கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான அனுமதி – டிச.31 வரை நீட்டித்தது மத்திய அரசு
தங்கம் விலை தொடர் சரிவு: இன்று பவுனுக்கு ரூ.1,400 குறைவு