August 11, 2026

10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆக.12 முதல் விநியோகம்

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் நாளை (ஆகஸ்ட் 12) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.

தமிழக பள்ளிக் கல்வியில் கடந்த கல்வியாண்டில் (2025-26) பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 11-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 9.1 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் மே 20-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த தேர்வெழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 22-ம் தேதி முதல் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (ஆகஸ்ட் 12) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.

இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் சேர்த்து இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இதையடுத்து பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம்.

இதுதவிர தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சமர்பித்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அவரவர் தேர்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களை http://www.dge.tn.gov.in/ எனும் வலைத்தளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love