June 2, 2026

15 ஆம் தேதிக்குள் புதுக்கட்சி : ரஜினி ஆதரவு கிடைக்குமா- அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான்?

இன்னும் 6 மாதத்திற்குள் வரவிருக்கும் இடைத்தேர்தலை குறிவைத்து அரசியல் களத்தில் புதிய நகர்வை மேற்கொள்ளும் அண்ணாமலை நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை பெற முயற்சிக்கலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

தமிழக அரசியல் களம் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத ஒரு இடமாக மாறி வருகிறது. சமீப காலமாக ‘சைலன்ட் மோடில்’ இருந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெகு விரைவில் கட்சி தொடங்க உள்ளார். மேலும், தமிழ் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகித்த காலத்தில் பாஜகவை ஓரளவுக்கு லைம் லைட்டில் வைத்திருந்தார். ஆனால் அவரின் பதவி மாற்றம் செய்யப்பட்டது. அவரின் மாநிலத் தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விகள் எழத்தொடங்கின. தமிழிசை, எல்.முருகன் உள்ளிட்டோரை போல அண்ணாமலைக்கும் தேசிய அளவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

  

நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை பெரிதளவில் பங்கெடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் பாஜக இந்த தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில்தான் பாஜக தலைமையை எதிர்த்து தனிக்கட்சி துவங்க அண்ணாமலை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த மாதம் புதிய கட்சியை அண்ணாமலை தொடங்க இருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்று தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை தக்கவைத்து இருக்கிறது. ஆனால் விஜய் போட்டியிட்டு வென்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி உட்பட ஐந்து தொகுதிகளுக்கு தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தினர்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் என சொல்லப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது பெருந்துறை தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவல்கள் கசிந்திருக்கின்றன.

15ஆம் தேதி கட்சி தொடக்கம்

இந்த சூழலில் வரும் நான்காம் தேதி அண்ணாமலை பிறந்தநாள் வருகிறது. எனவே குடும்பத்துடன் வெளியூர் சென்று இருக்கிறார் அண்ணாமலை. வரும் ஏழாம் தேதி தன் ஆதரவாளர்களை சந்திக்க இருப்பதாகவும் அண்ணாமலை தரப்பில் சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் 15க்குள் புதுக்கட்சி தொடங்க உள்ளார் அண்ணாமலை என சில தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், தாராபுரம் ஆகிய ஐந்து தொகுதிகளில் இன்னும் ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த ஐந்தில் இருக்கக்கூடிய பெருந்துறையில் தான் அண்ணாமலை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி ஆதரவு

அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகும் அவருக்கான ஆதரவாளர்கள் இருக்கவே செய்தனர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கென தனிக்கூட்டம் எப்போதுமே இருந்தது. மேலும் அவரின் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பும் தற்போது வரை கவனம் பெற்று வருகிறது.

ஆனாலும் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு வேறொரு பதவி கொடுக்காதது சட்டமன்றத் தேர்தலில் பங்கெடுக்க வாய்ப்பு அளிக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் அண்ணாமலை கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.‌

மேலும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரே ஒரு இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த காரணங்களாலே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தெரிகிறது. மேலும் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை தனக்கு நடிகர் ரஜினியின் ஆதரவு கிடைக்கும் என நம்புவதாக சில சொல்கின்றனர்.

மேலும் சமீபத்தில் நடந்த ரஜினி அண்ணாமலையின் சந்திப்பு அதற்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது.‌ சமூக வலைதளங்கள் மற்றும் பொதுவெளிகளில் அண்ணாமலை மற்றும் ரஜினி கைகோர்த்து இருப்பது போன்ற படங்களையும் தகவல்களையும் இணையத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Spread the love