புதுடெல்லி: சுங்கச் சாவடியிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கட்டணத்தில் சிறப்பு பாஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்காக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, சுங்கச் சாவடியிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் வசிக்கும் தகுதியுள்ள தனியார் வாகன உரிமையாளர்கள், ஆண்டுக்கு ரூ.1,500 கட்டணத்தில் சிறப்பு பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் தகுதியானவர்கள்?
திருத்தப்பட்ட விதிகளின்படி, செல்லுபடியாகும் ‘பாஸ்டேக்’ கணக்குகளைக் கொண்ட, தகுதியுள்ள வணிகம் அல்லாத வாகனங்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு பாஸ் வழங்கப்படும். வாகன உரிமையாளர்கள் திருத்தப்பட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த சிறப்பு பாஸ், அது வழங்கப்பட்ட குறிப்பிட்ட சுங்கச்சாவடிக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
சுங்கச்சாவடியானது நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைகளுக்குள் அமைந்துள்ளதா அல்லது வெளியே அமைந்துள்ளதா என்பதைப் பொறுத்து, அரசு 2 வருடாந்திரக் கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைகளுக்கு வெளியே அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் வாகன உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.1,500 செலுத்த வேண்டும். நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு, சிறப்பு பாஸ் கட்டணம் ரூ.3,000 ஆகும்.
மூடிய பயனர் கட்டண வசூல் முறையின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது விரைவுச்சாலைகளில் இந்த வசதி கிடைக்காது. மேலும், சேவைச் சாலை அல்லது மாற்றுச் சாலை பயன்பாட்டுக்கு கிடைக்கும் இடங்களில், வாகன உரிமையாளர்கள் இத்திட்டத்துக்கு தகுதி பெற மாட்டார்கள்.

More Stories
அக்டோபர் 28: பெட்ரோல் விலை ரூ.107.76, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினையை சமாளிக்க 41 நாடுகளில் இருந்து சமையல் காஸ் இறக்குமதி
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம்