சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இறுதிநாளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சென்னை: தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் இந்த ஜனநாயகப் போரில், 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமையும் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இத்தேர்தலில் 2-வது முறையாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
அவர் நேற்று தொகுதியில் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார். வீதி வீதியாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மார்ச் 30-ல் காஞ்சிபுரத்தில் தொடங்கி, ஏப்ரல் 21 வரை 23 நாட்களில் 135 தொகுதிகளில் தீவிரப்பரப்புரை மேற்கொண்டோம். சென்ற இடமெல்லாம் திமுகவின் மக்கள் நலத்திட்டங்களுக்குப் பெரும் வரவேற்பு இருப்பதை நேரில் கண்டேன்.
‘விடியல் பயணம்’, ‘மகளிர் உரிமைத் தொகை’ போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளன. தமிழகத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பாசிச பாஜகவுக்கும், அதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் பழனிசாமிக்கும் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு, இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற திமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளன.
சொன்னதைச் செய்யும் முதல்வர் மீதான மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தின் அரசியல் குரலை நெரிக்க முயன்ற தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்துப் போராடி, அதை நாடாளுமன்றத்தில் வீழ்த்தியது நமது தலைவரின் சரித்திர வெற்றி. இந்த வெற்றி சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.
பாசிச சக்திகளையும், அதிமுக அடிமைக் கூட்டத்தையும் வாக்கு ஆயுதத்தால் வீழ்த்துவோம். மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை திமுகவினர் விழிப்புடன் பணியாற்றி, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ எனும் குரல் மீண்டும் ஒலிக்கச் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

More Stories
கடைசி நாள் பரப்புரையில் பேச முடியாமல் கண் கலங்கிய செங்கோட்டையன்.. என்ன காரணம்?
அக்காடா.. தம்பிடா.. வானதி சீனிவாசனுடன் ஒரே பைக்கில் அண்ணாமலை பிரச்சாரம்!
”நான் உதயசூரியனாகவே மாறிவிட்டேன்” – பிரேமலதா நெகிழ்ச்சி