சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், நடப்பு நிதியாண்டில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில், சூரியசக்தி உள்கட்டமைப்பை விரிவுபடுத்த முயற்சி எடுக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த நிதியாண்டில் பரங்கிமலை ரயில் நிலையம், ஆவடியில் உள்ள மண்டல மின்சார இழுவை பயிற்சி மையம், ஆண்கள் விடுதி மற்றும் கிண்டி ரயில் நிலையம் ஆகியவற்றில் மொத்தம் 140 கிலோவாட் திறன் கொண்ட புதிய சூரிய சக்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இதன்மூலம், ஆண்டுக்கு சுமார் 2 லட்சத்து 4 ஆயிரத்து 400 யூனிட்கள் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், ஆண்டுக்கு ரூ.19.21 லட்சம் சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய இணைப்புகளுடன், சென்னை கோட்டத்தின் மொத்த சூரிய சக்தி திறன் 2,494.5 கிலோவாட்டை எட்டி உள்ளது. கடந்த நிதியாண்டில், இக்கோட்டம் 23 லட்சத்து 15 ஆயிரத்து 954 யூனிட்கள் சூரிய சக்தியை உற்பத்தி செய்து, அதன்மூலம் ரூ.1.43 கோடி சேமிப்பை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்கள், அலுவலகக் கட்டிடங்கள், பணிமனைகள், ஓய்வறைகள், நடைமேடை மேற்கூரைகள் மற்றும் பயிற்சி மையங்கள் எனப் பல்வேறு ரயில்வே வளாகங்களில் சூரிய மின்சக்தி உள்கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இதில், சென்னை சென்ட்ரல் புதிய நடைக்கூடம், மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், காஞ்சிபுரம், காட்பாடி, திருவொற்றியூர், அரக்கோணம், ராயபுரம், ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பரங்கிமலை, ஆவடி, கிண்டி, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அடங்கும்.
நடப்பு நிதியாண்டில் (2026-27) 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த முயற்சி கார்பன் உமிழ்வைக் குறைத்தல், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய மின் ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

More Stories
ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது
புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகர் நாளை பதவியேற்பு: தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்கிறார் ரங்கசாமி
விஜய்க்கு கை கொடுத்த காங்கிரஸ்… உடையும் இண்டியா கூட்டணி?