பழநி: கடந்த ஓராண்டில் பழநி மலைக்கோயில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டண சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி, சிறப்புக் கட்டண தரிசனம், பூஜைப் பொருட்கள், பஞ்சாமிர்தம், பிரசாதங்கள் விற்பனை, தங்க தொட்டில், தங்க ரத புறப்பாடு உள்ளிட்ட கட்டண சேவைகளின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் மலைக்கோயில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை பசலி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. இதனடிப்படையில், 2025 ஜூலை முதல் 2026 ஜூன் மாதம் வரையிலான கடந்த ஓராண்டில் ரூ.103 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 525 வருவாயாக கிடைத்துள்ளது. பழநி கோயில் வரலாற்றிலேயே ஓராண்டு வருமானம் ரூ.100 கோடியை கடப்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முந்தைய ஆண்டுகளான, 2024- 25ல் ரூ.97.32 கோடி, 2023- 24ல் ரூ.86.06 கோடி, 2022- 23ல் ரூ.80.60 கோடி வருவாயாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் பிரசாதம், படிப்பாதை, யானை பாதை வழியாக வரும் பக்தர்கள் களைப்பை போக்க மோர் வழங்குதல் உட்பட 28 கட்டணமில்லா சேவைகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.

More Stories
தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரிவாக்கம்: பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்