July 7, 2026

தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வில் 2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு அமைப்புடன் கூடிய கிணறு கண்டுபிடிப்பு

தென்காசி: தென்​காசி மாவட்​டம் மலை​யடிப்​பட்டி அகழாய்​வில் 2,500 ஆண்​டு பழமை​யான படிக்​கட்டு கிணறு கண்​டறியப்​பட்​டது.

தமிழ்​நாடு அரசு தொல்​லியல் துறை​யின் சார்​பில், தென்​காசி மாவட்​டம் கரிவலம்​வந்​தநல்​லூர் அருகே உள்ள மலை​யடிப்​பட்டி அகழாய்வில் 16 குழிகள் தோண்​டப்​பட்​டு, அகழாய்வு மேற்கொள்ளப்​படு​கிறது. இந்த அகழாய்வு தளத்​தில் படிக்கட்டுகளை கொண்ட சதுர வடிவ செங்​கல் கட்​டு​மான கிணறு கண்​டறியப்​பட்​டுள்​ளது. இது 2,500 ஆண்​டு​கள் பழமையான​தாக கருதப்​படு​கிறது.

இதுகுறித்​து, தொல்​லியல் துறை அதி​காரி​கள் தெரி​வித்​த​தாவது: காரிச்​சாத்​தான் கிராமத்​தில் கடந்த 1930-ம் ஆண்​டிலேயே ஆங்கிலேயர் ஆட்​சிக்​காலத்​தில் 6 தங்க நாண​யங்​கள் கண்​டெடுக்​கப்​பட்​டன. அதன்மூலம் இப்​பகுதி ஒரு வணிகத் தலமாக இருந்திருக்கலாம். மலையடிப்​பட்டி அகழாய்வில், 2,500 ஆண்​டு​கள் பழமை​யான சங்​க​கால கிணறு கண்​டறியப்​பட்​டுள்​ளது. 4-க்கு 4 மீட்​டர் அளவில் படிக்​கட்டு அமைப்​புடன் கூடிய செங்​கல் கட்​டு​மானத்​தில் இந்த கிணறு அமைந்​துள்​ளது.

இங்​குள்ள செங்​கற்​கள் 40 செமீ நீள​மும், 20 செமீ அகல​மும், 7 செமீ கனமும் கொண்​ட​தாக, மிகப்​பெரியவையாக உள்​ளன. கிணற்றின் உள்​பகு​தி​யில் நீர்​மட்​டம் அதி​க​மாக இருந்ததற்​கான தடயங்​கள் தெரிகிறது.

கோடை காலங்களில் இது பண்டையகால மக்களின் நீராதா​ரமாக இருந்​திருக்கக் ​கூடும். இதுவரை 2 மீட்​டர் ஆழம் வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து அகழாய்​வில் கிணற்​றின் முழு ஆழம் தெரியவரும்.

கீழடி, காவிரிப்​பூம்​பட்​ட​ணம், அரிக்​கமேடு போன்ற பகு​தி​களில் கிடைக்​கக் கூடிய செங்​கல் அமைப்​பு​களை போன்றே இந்த கிணற்​றின் கட்​டு​மான​மும் உள்​ளது. தமிழகத்​தில் வேறு எந்த அகழாய்​விலும் கண்​டறி​யாத வகை​யில் முதல் முறை​யாக படிக்​கட்டு அமைப்​புடன் இந்த கிணறு கண்​டறியப்​பட்​டுள்​ளது. இந்த கிணற்​றின் படிக்​கட்​டு​கள் கற்​களாலும், கிணற்​றுச் சுவர்​கள் செங்​கற்​களாலும் கட்​டப்​பட்​டுள்​ளன. படிக்​கட்​டில் உள்ள தேய்​மானம் நீண்ட கால​மாக மக்​கள் இந்த கிணற்றை பயன்​படுத்தி உள்​ளதை காட்​டு​கிறது.

இந்த அகழாய்​வின் மூலம் வாழ்​விட பகு​தி​யும், இடு​காட்டு பகு​தி யும் ஒரே இடத்​தில் இருந்​ததை கண்​டறிய முடிகிறது அகழாய்வு தளத்​தில் 16 குழிகள் மட்​டுமின்​றி, 2 இடு​காட்டு குழிகளிலும் அகழாய்வு நடை​பெறுகிறது அந்த குழிகளில் முது​மக்​கள் தாழிகள், வரையப்​பட்ட 3 பானை​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளன.

மேலும் கருப்​பு-சிவப்பு மட்​பாண்​டங்​கள், கீறல் குறி​யீடு​கள் கொண்ட பானை​கள், கண்​ணாடி மணி​கள், சுடுமண் சிற்பங்கள் விளை​யாட்​டுக் கற்​கள், கற்​கருவி​கள், இரும்​புப் பொருட்​கள், இரும்பு உருக்கின் கழி​வு​கள், ஹீமடைட் இரும்​புத்தாது, உயர்தர தகர வெண்​கலத் துண்​டு ஆகியவை கிடைத்துள்​ளன.

இங்கு கண்​டறியப்​பட்​டுள்ள தொல்​லியல் சான்​றுகள் மூலம் நுண்கற்​காலம், இரும்​புக் காலம், வரலாற்று தொடக்க காலம், வரலாற்​றுக் காலம் ஆகிய அனைத்து பண்​பாட்டு காலங்​களி​லும் இங்கு மக்​கள் வாழ்ந்​திருக்​கலாம் என அறிய முடிகிறது. இவ்வாறு கூறினார்.

Spread the love