புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை 12 மணிக்கு பின்னர் மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 5-ம் நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம் போல இரு அவைகளும் கூடின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்குவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
எனினும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஓம் பிர்லா தொடர்ந்து முயன்றார். “கேள்வி நேரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க நீங்கள் விரும்பினாலும் அதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும்.
நேற்றும்கூட இதை நான் தெரிவித்தேன். அவையின் செயல்பாடுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள். என ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை தொடர்ந்து நடக்க நீங்கள் விரும்பவில்லை என்பதால் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கிறேன்” என அறிவித்தார். பின்னர் அவை கூடி நடவடிக்கைகள் தொடங்கியது. ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இனி மக்களவை திங்கள்கிழமை கூடும்.
2 மணி வரை ஒத்திவைப்பு:
அதேபோல், மாநிலங்களவையின் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் காலை 11 மணிக்கு அவை கூடியது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரச்சினை குறித்துப் பேச எதிர்க்கட்சித் தலைவர் கார்கேவை, சி.பி. ராதாகிருஷ்ணன் பேச அழைத்தார்.
அப்போது, ஆளும் கட்சி எம்பிக்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவையை பகல் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார். ஆனால் மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. கடந்த 5 நாட்களாக நிலவும் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

More Stories
“சிஜேபி போராட்டத்துக்கு பின்னால் வெளிநாட்டு சக்திகள்” – ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்
டெல்லியில் இணைய சேவை முடக்கம்: அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல்!
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் தனியாக கோஷம்,