சென்னை: மேகதாது பிரச்சனை தொடர்பாக பேச்சு நடத்த முதல்வர் விஜய் ஆக.3ல் கர்நாடகா செல்வது உறுதியாகியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை தமிழ்நாடு – கர்நாடகா இடையே நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்தாலும், மேகதாது அணை பிரச்னை என்பது கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில், காவிரி படுகையில் 5வது அணையாக மேகதாதுவை கட்டி முடிக்க கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாகி விடும், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால், கர்நாடக அரசும், முதல்வர் டி.கே.சிவகுமாரும் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக இரண்டு மாநிலத்தின் எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை உள்ளது. இதற்கிடையே, தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் ஆகஸ்ட் 3ம் தேதி பெங்களூருவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருப்பதால், இந்த சந்திப்பில் பங்கேற்கக்கூடாது என்று தமிழக முதல்வர் விஜய்க்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விஜய் – டி.கே.சிவகுமார் சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், முதல்வர் விஜய் ஆக.3ல் கர்நாடகா செல்வது உறுதியாகியுள்ளது. முதலமைச்சர் விஜயுடன் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாரும் கர்நாடகா செல்கின்றனர். முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, தலைமைச் செயலாளர் சாய்குமார், முதல்வரின் செயலாளர்கள் 2 பேர், அட்வகேட் ஜெனரல் கர்நாடகா செல்கின்றனர். முதல்வர் விஜய், 3 அமைச்சர்கள், அதிகாரிகள், ஆலோசகர்கள் என மொத்தம் 13 பேர் குழு கர்நாடகா செல்கிறது.

More Stories
“தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” – டிகே.சிவகுமார் வேண்டுகோள்
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடல் சீற்றம்: பாம்பன் – குருசடை தீவு படகு சவாரி நிறுத்தம்
செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் – டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உத்தரவு