August 4, 2026

அசாமில் பயிற்சியும் விசைப் படகும் இன்றி மரப்படகு மூலம் 2,000 பேரைக் காப்பாற்றிய இளைஞன்!

அசாம்: அ​சாமில் முறை​யான பயிற்​சி​யும், மோட்​டார் படகும் இன்றி, ஒரு சிறிய மரப்​படகின் மூலம் வெள்ளத்​தில் சிக்​கிய 2,000 பேரைக் காப்​பாற்றி அசத்தி​யுள்ளார் பத்​தாம் வகுப்பு படிப்பை பாதி​யில் நிறுத்திய 25 வயது இளைஞன் ஷ்ர​வன் குமார்.

கடந்த ஜூலை 19 அதி​காலை 3 மணிக்கு விறகு சேகரிக்க ஆற்றங்கரைக்​குச் சென்​ற​போது, 5 கிராமங்களைச் சேர்ந்த 2,000 பேரைக் காப்​பாற்​றும் சூழ்நிலை வரும் என்று அவர் நினைத்​துப் பார்க்கவில்லை. வழக்​க​மாக மழைக்​காலத்​தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்​படும் மரங்​களைச் சேகரிக்​கும் ஷ்ரவன், அன்று ஆற்​றின் வேகத்​தை​யும் அடித்து வரப்​பட்ட பெரிய மரங்​களை​யும் கண்டு ஏதோ அசம்​பா​விதம் நடக்​கப் போவதை உணர்ந்​தார்.

அவர் பயந்​தது போலவே விடிவதற்​குள் கிராமங்களுக்​குள் வெள்ளம் புகுந்​தது. அவரது சொந்த வீட்டை​யும் தண்​ணீர் சூழ்ந்தது. தனது தாயும், சகோதரரும் பொருட்​களைப் பாதுகாக்கப் போராடிய​போதும், குடும்​பத்​திற்கு உதவச் செல்லாமல் பிறரைக் காப்​பாற்​றவே ஷ்ர​வன் முடி​வெடுத்​தார்.

“நான் வீட்​டைப் பாது​காக்​கச் சென்​றிருந்​தால் மற்றவர்​களைக் காப்​பாற்ற ஆள் இருந்​திருக்க மாட்டார்கள்” என்​கிறார் ஷ்ர​வன். முறை​யான பயிற்​சி​யோ, விசைப்​படகோ இல்​லாத இவர், பத்​தாம் வகுப்போடு படிப்பை பாதி​யில் நிறுத்​தி​ய​வர் என்​பது குறிப்பிடத்தக்​கது.

ஆற்​றைப் பற்றி நன்கு தெரிந்​திருந்த இவர், “துலுங்கா நாவ்” என்ற சிறிய மரப்​படகை​யும், நண்பர்களை​யும் மட்​டுமே நம்​பி, அனுபவமிக்க படகோட்டிகளும்​ கூட பயந்த ஆபத்​தான வெள்ள நீரில் இறங்கி​னார். காலை 10 மணிக்​குத் தொடங்​கிய இந்த மீட்பு நடவடிக்கை இரவை​யும் தாண்டி அடுத்த நாள் வரை நீடித்​தது.

மின்​சா​ர​மும், தொடர்​பும் துண்​டிக்​கப்​பட்ட நிலை​யில், வீட்​டின் கூரைகளி​லும் இடுக்​கு​களி​லும் தவித்த குழந்தைகள், முதியவர்கள், கர்ப்​பிணி​கள் மற்​றும் நோயாளி​களை அஞ்​சாமல் மீட்​டனர். இருளில் மிதந்து வந்த மரக்​கட்​டைகள் மோதி படகு கவிழும் ஆபத்​தை​யும் பொருட்​படுத்​தாமல் செயல்​பட்ட இந்த இளைஞர்​கள் குழு, 5 கிராமங்​களைச் சேர்ந்த சுமார் 2,000 பேரைக் காப்​பாற்​றிப் புதிய சாதனை படைத்தது. அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதேவேளை​யில், ஜூலை 19 வெள்​ளத்​திற்​குப் பின், அசாமின் வெள்ள நிலை​மை​யில் சற்றே முன்னேற்றம் ஏற்​பட்​டுள்​ளது. தற்போது 44 நிவாரண முகாம்களில் 15,000-க்​கும் மேற்​பட்டோர் தங்​கி​யுள்​ளனர். மேலும், 17 நிவாரண விநி​யோக மையங்​கள்​ மூலம்​ 5,569 பேருக்​கு உதவி​கள்​ வழங்​கப்​பட்​டு வருகின்​றன.

Spread the love