புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நாளை (ஆக. 8) திட்டமிட்டபடி மாணவர்களின் குரல் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒன்றுபட்ட குரல்கள் ஒலிக்கும்போது மட்டுமே இந்த அரசு பணியும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “நாட்டின் அதிகப்படியான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பிரயாக்ராஜ் நகருக்கு நான் நாளை (ஆக.8) செல்கிறேன்.
இந்த (அரசு) அமைப்பு நேர்மையற்றதாக மாறிவிட்டது என்பது ஒவ்வொரு மாணவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. உங்கள் (மாணவர்கள்) கடின உழைப்பில் எந்த குறையும் இல்லை. உங்கள் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காத இந்த அமைப்பின் நோக்கத்தில்தான் தவறு இருக்கிறது.
வினாத்தாள் கசிவு, பணி நியமனங்கள் முடக்கம், பல ஆண்டுகால காத்திருப்பு என தவறுகள் நிகழ்ந்த போதும் யாரும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.
இதற்காக, ராஜஸ்தானின் கோட்டாவிலும், உத்தராகண்ட்டின் டேராடூனிலும் குரல்கள் எழுந்தன. டெல்லியில் கேள்விகள் கேட்டதற்காகவே மாணவர்கள் தடியடிக்கு உள்ளாகினர். இறுதியில், ஒரு அமைச்சர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒன்றுபட்ட குரல்கள் ஒலிக்கும்போது மட்டுமே இந்த அரசு பணியும். இதைப் பற்றிப் பேசுவதற்காகவே நான் நாளை பிரயாக்ராஜ் வருகிறேன். நீங்களும் வாருங்கள். ஆகஸ்ட் 8, மாலை 5 மணி, கே.பி. மைதானம், பிரயாக்ராஜ்” என தெரிவித்துள்ளார்.

More Stories
எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் – முக்கிய அம்சம் என்ன?
தேசிய உயிரி எரிவாயு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் மோடியுடன் நெதன்யாகு தொலைபேசியில் ஆலோசனை