August 27, 2026

“300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை” – நேபாள வெளியுறவு அமைச்சர் தகவல்

காட்மாண்டு: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.

நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​கள் உடைப்பு காரண​மாக கோசி, திரிசூலி நதி​களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்​ளப்​பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரை காணவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக நேபாள நாட்டின் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், “இதுவரை 175 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரை காணவில்லை. தற்போதைய தகவலின்படி, 28 நாடுகளைச் சேர்ந்த 476 பேரை காணவில்லை. இந்த எண்ணிக்கை ஆய்வுக்கு உட்பட்டது.

இந்த தருணத்தில், எங்கள் முன்னுரிமை என்பது உயிர்களைக் காப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதாகவே உள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து அரசு தொடர் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.” எனத் தெரிவித்துள்ளன.

நேபாள வெள்ள பாதிப்பு தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் கூறுகையில், ”ரசுவா பகுதியில் இந்த துயரச் சம்பவத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. தற்போது அவர்களில் பலர் காணாமால் போயுள்ளனர். இந்த பேரிடரின் முழு அளவை நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம்.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 300 இந்தியர்கள் – இவர்களில் பெரும்பாலானோர் மானசரோவர் யாத்ரீகர்கள் – காணாமால் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களைத் தொடர்பு கொள்ள அரசாங்கம் முயன்று வருகிறது. வெளிநாட்டினரில் சுமார் 500 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நேபாள குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் நாங்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோமோ அதே அளவு வெளிநாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நலனிலும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்திய அரசு ஏற்கனவே நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நெருக்கடியான நேரத்தில் நேபாளத்துக்கு துணை நிற்குமாறும், நாடு தன்னைத்தானே மீட்டெழுப்ப தொடர்ந்து இங்கு வருகை தருமாறும் நாங்கள் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். உடனடி நிவாரண நடவடிக்கைகள் மட்டுமல்லாது, நேபாளத்துடன் உலகம் தொடர்ந்து இணைந்திருப்பதும் நாங்கள் மீண்டு வர மிக முக்கியம்.

கடந்த 2015ல் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்துக்குப் பிறகும் நாங்கள் வலிமையுடன் மீண்டு வந்தோம். நேபாளம் தன்னைத்தானே சீரமைத்துக்கொள்ளும்.” என தெரிவித்தார்.

இரண்டாவது இந்திய விமானம் புறப்பட்டது:

இதனிடையே, இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”10 டன் எடையுள்ள மனிதாபிமான உதவிப்பொருட்கள் தூதர் ஸ்ரீவஸ்தவவால், நேபாளத்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் கடக் ராஜ் பவுலிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த உதவிப் பொருட்கள் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விவாரண நடவடிக்கைகளுக்கு உதவும். இந்தியா நேபாளத்துடன் உறுதியுடன் நிற்பதுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதிபூண்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 37.5 டன் அளவிலான நிவாரணம் மற்றும் பேரிடர் பொருட்கள், மருந்துகள், உணவுப் பொட்டலங்களுடன் இரண்டாவது இந்திய விமானம் நேபாளத்துக்கு புறப்பட்டுள்ளது.

Spread the love