August 28, 2026

நேபாள வெள்ளத்தில் சிக்கிய ராசிபுரம் தொழிலதிபர் குடும்பத்தினர்…தொடர்பு துண்டிக்கப்பட்டதால் குடும்பத்தினர் கவலை,,,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆன்மிகப் பயணமாக நேபாளம் சென்ற நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராசிபுரத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.

ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ஏ.கே.பி. பழனிவேல், வயது 63. இவர் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் திருப்பூர் மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள இந்தியன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, பழனிவேல் தனது மனைவி அருள்மணி, வயது 57, உறவினர்களான அசோகன், வயது 67, கற்பகம், வயது 61, காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாராயி, வயது 56 உள்ளிட்டோருடன் ஆன்மிகப் பயணமாக நேபாளம் சென்றுள்ளார்.

டிராவல்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா பயணத்தின் மூலம் அவர்கள் நேபாளத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

பயணத்தின் போது, புதன்கிழமை காலை 8.45 மணியளவில், ராசிபுரத்தில் உள்ள குடும்பத்தினருடன் அவர்கள் அலைபேசி வாயிலாக பேசியுள்ளனர்.

அதன்பிறகு நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக அவர்களிடம் இருந்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? பாதுகாப்பாக உள்ளார்களா? என்பது தெரியாமல் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

நேபாளத்தில் வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராசிபுரத்தைச் சேர்ந்த இந்தக் குழுவினரின் நிலை குறித்து உறவினர்கள் தொடர்ந்து தகவல்களைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, தொழிலதிபர் ஏ.கே.பி. பழனிவேலின் மகன் தமிழ்முருகன், அசோகனின் மகன் சரவணன் ஆகியோர் பெங்களூரு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் நேபாளம் செல்லத் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், தொழிலதிபர் ஏ.கே.பி. பழனிவேல், கொங்கு நாடு மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி. சின்னராஜின் உடன்பிறந்த அண்ணன் என்பது குறிப்பிடதக்கது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு மத்தியில், ராசிபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் உள்ளிட்ட குழுவினரின் நிலை என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாததால், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ராசிபுரத்திலிருந்து நேபாளம் சென்ற குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்பதே தற்போது அவர்களது குடும்பத்தினரின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

Spread the love