September 1, 2026

சூரியனை சுற்றி திடீரென ஒளிவட்டம்: ஆர்வமுடன் படம் பிடித்த கடலூர், புதுவை மக்கள்

புதுச்சேரி: கடலூர், புதுச்சேரியில் நேற்று வானில் சூரியனை சுற்றி ஒளி வட்டம் காணப்பட்டது. சிலர் இதை வானவில் என்றனர்.

சிலர் ஜோதிட காரணிகளை குறிப்பிட்டனர். சிறிதுநேரத்தில் ஒளி வட்டம் மறைந்தது. புதுவை கடற்கரைச்சாலை, சட்டப்பேரவை உள்ளிட்ட பல பகுதிகளிலும், இதேபோல் கடலூரிலும் பலரும் ஒளிவட்டத்தை ஆர்வமுடன் புகைப்படம் எடுத்தனர்.

இதுபற்றி அறிவியல் ஆசிரியர்கள் கூறியதாவது: சூரியனை சுற்றி காணப்பட்ட வட்டம் வானவில் அல்ல. வானத்தில் இருக்கும் உயரமான மேகங்கள் பெரும்பாலும் பனி படிகங்களாக இருக்கும். பனித்துகள்கள் வழியாக சூரிய ஒளி செல்லும்போது ஒளி விலகல், ஒளிசிதறலால் சூரியனை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்.

வானில் அறுங்கோண வடிவ பனிப்படிகங்கள் வழியாக சூரிய ஒளி செல்லும்போது அது 22 டிகிரி கோணத்தில் வளைந்து சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டத்தை உருவாகும்.இது மிகவும் பொதுவான ஒரு ஒளியியல் நிகழ்வாகும்.

பருவமழைக்கு முன்னரோ அல்லது வானத்தில் மெல்லிய மேகங்கள் அதிகமாக இருக்கும்போதோ இது தோன்றும். வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஈரப்பதம் இருப்பதற்கான அறிகுறியாகவும் இது அமைகிறது.

இது பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தாலும், இதுபோல் நிகழும் போது நேரடியாக சூரியனை பார்ப்பதை தவிர்ப்பது கண்களுக்கு நல்லது. சில சமயங்களில் இது நிலவை சுற்றியும் தோன்றும். அது நிலவு ஒளிவட்டம் என்றனர்.

Spread the love