
அல் பலா பல்கலை.
புதுடெல்லி: கடந்த ஆண்டு டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சில மருத்துவர்கள் ஹரியனா அல் பலா பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர சோதனையில், பல்கலைக்கழகத்தின் நிதி முறைகேடுகள் மற்றும் போலி ஆவணங்கள் குறித்த உண்மைகள் வெளி வந்தன.
இதுதொடர்பாக அல்-பலா பல்கலைக்கழகத்தின் தாளாளர் ஜவாத் அகமது சித்திகி மற்றும் அல்-பலாஹ் அறக்கட்டளை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்ட விரோத பணப் பரிமாற்ற ஜவாத் அகமது சித்திகி குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்துக்கு தேவையான யுஜிசி அங்கீகாரம் மற்றும் என்ஏஏசி தகுதிச் சான்றிதழ் இருப்பதாகப் பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் கட்டணமாகப் பெற்று ஏமாற்றியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ.493 கோடி வரை மாணவர்களிடம் இருந்து சட்ட விரோத நிதி திரட்டப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய சுமார் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முடக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜவாத் அகமது சித்திகியை போலீஸார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

More Stories
தங்கம் விலை மாலையில் அதிரடி உயர்வு
மேகாலயாவில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து: உரிமையாளர்கள் 2 பேர் கைது
பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!