புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் சோஹன். இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் தனது குடும்பத்தாருடன் ஸ்ரீநகரில் குல்மார்க் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக மேக்மை டிரிப் இந்தியா நிறுவனத்தின் இணையதளம் வழியாக ஸ்ரீநகரில் ஹெரிடேஜ் ரோஸ் இன், குல்மார்க்கில் ஆப்பிள் ட்ரீ ரெசார்ட்ஸ் ஆகிய 2 ஓட்டல்களில் அறையை முன்பதிவு செய்தார்.
திட்டமிட்டபடி ஸ்ரீநகரிலுள்ள அந்த ஓட்டலுக்கு ராஜேஷ் குடும்பத்தார் சென்றபோது அந்த பெயரில் ஓட்டலே இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குல்மார்க்கிலுள்ள ஆப்பிள் ட்ரீ ரெசார்ட்ஸுக்கு சென்றபோது அந்த பெயரில் ஒரு ஓட்டலே அங்கு இல்லை என்று தெரியவந்தது. இல்லாத 2 ஓட்டல்களுக்காக பணம் கொடுத்து ராஜேஷ் ஏமாந்தார். இதனால் அவர்கள் கடுங்குளிரில் காரிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக குர்தாஸ்பூரிலுள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராஜேஷ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் லலித் மோகன் டோக்ரா, உறுப்பினர் பகவான் சிங் மதாரு ஆகியோர் மேக் மைப் டிரிப் இந்தியா நிறுவனம் ரூ.48,775-ஐ ராஜேஷ் குடும்பத்தாருக்கு வழங்க உத்தரவிட்டனர்.
ஓட்டல் அறையை முன்பதிவு செய்ததற்கான பணம் ரூ.18,775, குடும்பத்தாருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல், நிதி இழப்பு ஆகியவற்றுக்காக ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு, ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு என மொத்தம் ரூ.48,775-ஐ ராஜேஷ் சோஹன் குடும்பத்துக்கு மேக் மை டிரிப் வழங்க வேண்டும் என குறைதீர் ஆணைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More Stories
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு
ஹைதராபாத்தில் உற்சாகமாக விநாயகர் சிலைகள் ஊர்வலம்: ரூ.39 லட்சம் ஏலம் போன லட்டு பிரசாதம்
“காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்திய, சீன ஒத்துழைப்பு அவசியம்” – ஐநாவில் நேபாள பிரதமர் உரை