உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விமானக் கடத்தல் சதி முறியடிப்பு சம்பவத்தில் ஒவ்வொரு விநாடியும் திருப்பங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது.
பைலட் அறையில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களையும், நேரில் கண்ட காட்சிகளையும், பயணிகளைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்த இஸ்ரேல் பயணி விவரித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி நேற்று முன்தினம் காலை 180 பேருடன் “ஃபிளை துபாய்” விமானம் புறப்பட்டது.
இதில் 174 பயணிகள், 2 பைலட்கள், 6 ஊழியர்கள் இருந்தனர். இஸ்ரேல் எல்லையை விமானம் நெருங்கியபோது துணை பைலட் திடீரென கோடாரியால் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை தாக்கினார்.
இதில் நிலைகுலைந்த மச்சார், துணை பைலட்டை தீரத்துடன் எதிர்த்துப் போராடினார். கோடாரி தாக்குதலில் இந்திய பைலட் மச்சாரின் வலது கை துண்டிக்கப்படும் நிலையில் இருந்தது. அந்த கையில் இருந்து ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது.
ஆனாலும் துணை பைலட்டை எதிர்த்துப் போராடிய மச்சார், சமயோசிதமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சிறப்பு பொத்தானை அழுத்தி பைலட்கள் அறைக் கதவை திறந்துவிட்டார்.
இஸ்ரேல் பயணிகளின் துணிச்சல்
இந்த நேரத்தில் விமானத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர துணை பைலட் முயற்சி செய்தார். அப்போது இந்திய பைலட் மச்சாரின் அலறலை கேட்டு இஸ்ரேல் பயணி யானிவ் ஹயூன், பைலட்கள் அறைக்கு விரைந்து சென்றார். அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்த துணை பைலட் கதவை அடைக்க முயன்றார்.
வலுக்கட்டாயமாக கதவை தள்ளி உள்ளே நுழைந்த யானிவ் ஹயூன், இந்திய பைலட் மச்சார் தரையில் ரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஓமனைச் சேர்ந்த துணை பைலட், இஸ்ரேல் பயணி யானிவை கோடாரியால் தாக்க முயன்றார்.
அதற்குள் இஸ்ரேலை சேர்ந்த ஆசப் ராஜுவான், ஸ்விகா மானெஸ், முசாயேவ் ஷோட்டா ஆகியோர் அடுத்தடுத்து பைலட்கள் அறைக்குள் நுழைந்து துணை பைலட்டை மடக்கிப் பிடித்தனர். அதே விமானத்தில் இரு பைலட்கள் சாதாரண பயணிகளாக பயணம் செய்தனர்.
அவர்கள் விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஜோர்டான் வான்பரப்பில் இருந்த விமானம் திசை திருப்பப்பட்டு சவுதி அரேபியாவின் தபூக் நகரில் தரையிறக்கப்பட்டது.
அபுதாபியில் சிகிச்சை
அங்கு சவுதி அரேபிய பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து ஓமனைச் சேர்ந்த துணை பைலட்டை கைது செய்தனர். படுகாயமடைந்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மச்சாரின் மனைவி, இரு பிள்ளைகள் துபாயில் வசிக்கின்றனர்.
இதை கருத்தில் கொண்டு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்மித் மச்சார் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. “அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. அவரது உடல்நலம் தேறிவருகிறது” என்று இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தொலைக்காட்சி தொடர் மூலம் விமான இயக்கம் அறிந்தேன்”
இஸ்ரேல் பயணியும் பிளம்பருமான யானிவ் ஹயூன் கூறியதாவது: கனடா தொலைக்காட்சியில் மேடே என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. இ்தில் விமான விபத்துகள், கடத்தல்கள் இடம்பெறும். இந்த தொடரை விரும்பிப் பார்ப்பேன்.
இதேபோல “ஏர் கிராஷ் இன்வெஸ்டிகேஷன்” என்ற கனடா தொலைக்காட்சி தொடரையும் விரும்பிப் பார்ப்பேன். இந்த தொடரில் விமான விபத்துகளின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மூத்த பைலட்கள் தெளிவாக விளக்கி கூறுவார்கள்.
மேலும் தன்னார்வத்தின் அடிப்படையில் விமானத்தை இயக்குவது தொடர்பான யூடியூப் வீடியோக்களையும் பார்ப்பேன். இந்த அனுபவத்தின் அடிப்படையில் தரையை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தை மேல் எழுப்பி பறக்கச் செய்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கட்டிடத்தின் மீது மோத சதி
இஸ்ரேல் பாதுகாப்புப்படை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுர கட்டிடத்தில் விமானங்களை மோதி மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 2,977 பேர் உயிரிழந்தனர். இதே பாணியில் “ஃபிளை துபாய்” விமானத்தை கடத்தி டெல் அவிவ் நகரில் உள்ள உயரமான கட்டிடத்தின் மீது மோத துணை பைலட் சதித் திட்டம் தீட்டி இருந்தார்.
அவசரகால பயன்பாட்டுக்காக பைலட்கள் அறையில் கோடாரி வைக்கப்பட்டு இருக்கும். அந்த கோடாரி மூலம் துணை பைலட் தாக்குதலை நடத்தியிருக்கிறார். பைலட்கள் அறைக் கதவை மச்சார் திறக்காமல் இருந்திருந்தால் விமானத்தில் பயணம் செய்த 180 பேரும் உயிரிழந்திருப்பார்கள்.
அதோடு டெல் அவிவ் நகரின் ஏதாவது ஒரு கட்டிடத்தின் மீது விமானத்தை மோதி மிகப்பெரிய அளவில் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கக்கூடும். இந்திய பைலட் மச்சாரின் வீரம் மற்றும் 4 இஸ்ரேல் பயணிகளின் துணிச்சலான நடவடிக்கைகளால் பேரழிவு தடுக்கப்பட்டு உள்ளது.

More Stories
ஸ்மித்தைப் போலவே 379 பயணிகளை காப்பாற்றிய நீரஜா பானோட் – 1986 கடத்தல் சம்பவம் வைரல்
‘இந்திய விமானி ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ’ – மோடி, ட்ரம்ப் புகழாரம்
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 41 பேர் கொல்லப்பட்டனர்: ஆப்கன் அரசு தகவல்