சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து சம்பிரதாயத்துக்காக பாடப்படும் சடங்கு அல்ல, வேதங்களைப் பாடுவது போல் பக்தியுடன் அதனை பாட வேண்டும் என ‘நேச்சர் கியூர் ஃபெஸ்ட்’ விழாவில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தினார்.
உலக சைவ உணவுக் கழகம், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர் மன்றம், ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மக்களிடையே யோகா, இயற்கை மருத்துவம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘நேச்சர் கியூர் ஃபெஸ்ட்- 2026’ திருவிழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இயற்கை மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வுப் பேரணியுடன் தொடங்கிய விழாவில், பொதுமக்களுக்கு இலவச யோகா, இயற்கை மருத்துவ ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டன.
விழாவின் சிறப்பம்சமாக அமைக்கப்பட்டிருந்த இயற்கை உணவு கண்காட்சியில், 1,000-க் கும் மேற்பட்ட சமையல் எரிவாயு, எண்ணெய் இல்லாத பாரம்பரிய இயற்கை உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு நோவா உலக சாதனை அங்கீகாரம் பெறப்பட்டது.
தொடர்ந்து, ‘சைவ உணவைத் தேர்ந்தெடுப்போம், யோகா செய்வோம்’ என்ற விழிப்புணர்வு அணிவகுப்பும் நடைபெற்றது. தொடக்க விழாவில் இயற்கை மருத்துவம் சார்ந்த நூல்களை வெளியிட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: எந்தவொரு உயிருக்கும் துன்பம் தராத சைவ உணவு நமக்குள் மன அமைதியையும், மனத்தெளிவையும் தரும்.
திருவள்ளுவர், காந்தி, பிதாகரஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெர்னாட் ஷா போன்ற அறிஞர்கள் கூட சைவ உணவின் சிறப்புகள் குறித்து் பேசியுள்ளனர். அதற்காக சைவ உணவு என்பது உயர்ந்த தகுதி என்பதெல்லாம் அல்ல. சைவ உணவு உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுடனும் நம்மை நெருக்கமாகப் பிணைக்கிறது.
உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று பணம் செலவழித்து உடம்பை வருத்துவதை விட, வீட்டில் யோகா செய்தால் 120 ஆண்டுகள் வரை கூட ஆரோக்கியமாக வாழலாம். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது உச்சரிப்பில் பிழை இருந்தது.
வேதங்களையும் உபநிடதங்களையும் பாடும்போது எவ்வளவு பக்தி இருக்குமோ, அதே அளவு பக்தியுடன், அர்த்தத்தை புரிந்துகொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் என்.மணவாளன், உலக சைவ உணவுக் கழக தலைவர் மஹாவீர் போத்ரா, நிறுவனர் தாராசந்த் துகார், செயலாளர் சுதாகர், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஸ்ரீராம் துவூரி, அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர் கே.டி.ஸ்ரீனிவாச ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
கூட்டுறவு சங்கங்களில் நிலுவையிலுள்ள பயிர்க்கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழக அரசு
ஏரலில் இரவில் தூங்கிய மருத்துவரை எழுப்பி கேள்வி கேட்ட தவெக எம்எல்ஏ
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை ஓய்கிறது பிரசாரம்: தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை!