அமராவதி: அர்னாப் புயலால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் சுமார் ரூ.4600 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆந்திர அரசு முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட அர்னாப் புயல் யானம் – நர்சாபுரம் அருகே புதன்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக, ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், குண்டூர், பாபட்லா, அனகாபல்லி, கோதாவரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதுடன், ஒடிசா மாநிலத்தின் பகலட்டி அணையின் மதகுகள் திறந்து விடப்பட்டதால், பஹுதா நதியின் நீர் ஆந்திராவுக்குள் புகுந்தது. இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், இச்சாபுரம் அருகே சாலை வெள்ளத்தில் மூழ்கி, வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மேலும், இம்மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளங்களும் கன மழையில் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டம் கொம்மரிகுண்டாவை சேர்ந்த நரசம்மா (52) என்பவர் ஈரமான துணிகளை வீட்டு கூரை மீது காயவைக்க சென்றார். அப்போது உயர் அழுத்த மின்சார கம்பி அவரது வீட்டின் மீது விழுந்திருந்தது.
இதனை அறியாமல் நரசம்மா துணியை காய போட்டதால் அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அங்கிருந்த அவரது கணவர் பங்காரய்யா (57), மனைவியை காப்பாற்ற ஓடி சென்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரும் சம்பவ இடத்திலேயே தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தனர்.
அர்னாப் புயல் காரணமாக தகவல் தொழில்நுட்பம் பாதிக்கப்பட்டு, மேற்கு கோதாவரி அந்தர்வேதி அருகே ஒரு பெரிய கப்பல் கடலிலேயே நின்று விட்டது. கடற்படையினர் ஹெலிகாப்டரில் விரைந்து சென்று 13 பேரை மீட்டனர். மீதமுள்ள 7 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது சந்திரபாபு நாயுடு கூறுகையில், “அர்னாப் புயலால் சுமார் 200 படகுகள் நாசம் அடைந்துள்ளன. 8 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ரூ.4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று இரவுக்குள் 90 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டு விடும். இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

More Stories
பூட்டானில் பனி ஏரி உடைப்பு: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட்
இண்டியா கூட்டணி போராட்டத்துக்கு சிஜேபி ஆதரவு: அபிஜித் திப்கே அறிவிப்பு
பாக். துறைமுகத்தில் 7 மாதமாக சிக்கி தவிக்கும் 6 இந்தியர்கள்: மீட்கக் கோரி மத்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை