நாமக்கல், நவ. 17:
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 515 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மதுபாலன் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர், அவற்றைப் பரிசீலித்து உரிய அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, 5 பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கினார். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட 16 பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மராத்தான் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்ற 100 பேருக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 500 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
திருச்செங்கோடு வட்டம், தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த சின்னப்பிள்ளையின் வீடு தீ விபத்தில் சேதமடைந்ததையொட்டி, அவருக்கு ரெட்கிராஸ் சார்பில் சமையல் பாத்திரங்கள் அடங்கிய தொகுப்பு, வேட்டி, சேலை, துண்டு, பாய், கொசுவலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

More Stories
தவெக மாவட்ட செயலாளர் 50 ஆவது பிறந்தநாள் விழா
திருப்பூர்மாவட்டம்
கரூர் மாவட்டம்