திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவில் பரணி தீபம் மற்றும் மகாதீபம் தரிசனத்துக்கு நவ.18-ம்தேதி (இன்று) முதல் ‘ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் வௌியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, பரணி தீபம் மற்றும் மகாதீபம் தரிசனத்துக்கான ரூ.500 மற்றும் ரூ.600 மதிப்பிலான கட்டண நுழைவு சீட்டுகள் 1,600 எண்ணிக்கையில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது.
அதன்படி, இந்தாண்டு நடைபெறும் தீபத்திருவிழாவில் பக்தர்களின் நலன்கருதி, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தலின்படி, பரணிதீபம் மற்றும் மகாதீபம் தரிசனத்துக்கான நுழைவு சீட்டுகள் முற்றிலும் இலவசமாக 3,000 எண்ணிக்கையில் ‘ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நவ.24-ம் தேதி அன்று காலை நடைபெறவுள்ள பரணிதீபத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு 500 நுழைவு சீட்டுகள்.
திருவண்ணாமலை மாவட்டம் தவிர்த்த பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு 500 நுழைவு சீட்டுகளும், அன்றைய தினம் மாலை மகாதீபம் தரிசனத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு 1,000 நுழைவு சீட்டுகள், பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு 1,000 நுழைவு சீட்டுகள் வழங்கப்படஉள்ளன.
இத்தகைய நுழைவு சீட்டுகளை பெறவிரும்பும் பக்தர்கள், ஆதார் எண்ணை பயன்படுத்தி, அண்ணாமலையார் கோயிலின் அதிகாரப்பூர்வ இணைய தளமான http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரியில் நவ.18-ம் தேதி (இன்று) காலை 11.00 மணி முதல் நவ.20-ம் தேதி அன்று மாலை 3 மணிவரை முற்றிலும் இலவசமாக ‘ஆன்லைன்’ மூலம்முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், நவ.20-ம் தேதி அன்று மாலை 4 மணியளவில், ‘ஆன்லைன்’ முன்பதிவு செய்த பக்தர்களில் கணினி மூலம் தானியங்கி குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு, மின்னணு நுழைவு சீட்டினை (e-Ticket) பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புடன் கூடிய குறுஞ்செய்தி அவர்கள் முன்பதிவின் போது அளித்த கைபேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் வாயிலாகவும் தகவல் அனுப்பி வைக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் தங்களுக்கான மின்னணு நுழைவு சீட்டினைப் பதிவிறக்கம் செய்து, நவ.24-ம் தேதி அன்று கோயிலின் நுழைவு வாயிலில் அதனை காண்பித்து, ஸ்கேன் செய்த பின்னர் தீப தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், ஆதார் அட்டையை அடையாள சான்றாக கொண்டு சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். பரணி தீபத்துக்கு பதிவு செய்பவரால், மகா தீபத்துக்கு பதிவு செய்ய இயலாது. மகா தீபத்துக்கு பதிவு செய்பவரால் பரணி தீபத்துக்கு பதிவு செய்ய இயலாது.
பரணி தீபத்துக்கான முன்பதிவு செய்பவர்கள் ஒரு சீட்டு மட்டுமே பதிவு செய்ய இயலும். மகா தீபத்துக்கு பதிவு செய்பவர்கள் வெவ்வேறு ஆதார் எண்களை கொண்டு 2 பதிவுகள் மேற்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளனர்.

More Stories
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான பரிகார வழிபாட்டு முறைகள்!
கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியது
கந்தசஷ்டி திருவிழா நிறைவு: பழநியில் கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்